600க்கு 514 மதிப்பெண்கள் எடுத்தும் 4 பாடங்களில் தோல்வியா! அதிர்ச்சியடைந்த பிளஸ்-2 மாணவி
தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ்-2 பொது தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 514 மதிப்பெண்கள் எடுத்த மாணவி, 4 பாடங்களில் தோல்வி அடைந்திருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிளஸ்-2 பொது தேர்வு முடிவு
தமிழகத்தில் நடைபெற்ற பொது தேர்வுகளின் முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னே வெளியான நிலையில், திண்டுக்கலை சேர்ந்த மாணவி 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
இந்த பொது தேர்வில் நிறைய மாணவ, மாணவிகள் கூடுதல் மதிப்பு பெற்று அனைவரது பாராட்டையும் பெற்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பிளஸ்-2 பொது தேர்வில் 95.84 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அவ்வகையில் மதுரை சூரங்குளம் பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவி. கடந்த 2021ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்தார்.
100க்கு 138 மதிப்பெண்
இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக 12 வகுப்பை தொடர முடியாமல், இந்த ஆண்டு தனியார் மூலம் பொது தேர்வு எழுத அனுமதி பெற்றார்.
நேற்று முன் தினம் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஆர்த்தியின் மதிப்பெண்ணை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
அதில் தமிழில் 100க்கு 138 மதிப்பெண்களும், இயற்பியலில் 71 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 92 மதிப்பெண்களும், கணிதத்தில் 56 மதிப்பெண்களும், வேதியலில் 71 மதிப்பெண்ணும் பெற்றிருப்பதாக முடிவு வெளியானது.
மதிப்பெண் பட்டியலில் குழப்பம்
இந்த பட்டியலில் தமிழில் 100க்கு 138 மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதை பார்த்து மாணவி ஆர்த்தி குழப்பமடைந்து, தேர்வு நடத்தும் குழுவினரை ஆசிரியர்கள் மூலமாக தொடர்பு கொண்டுள்ளார்.
இச்சம்பவத்தை கள ஆய்வு செய்த தேர்வு குழுவினர், 2021ல் 1200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் தற்போதுள்ள பாடத்திட்டத்தின் படி 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதப்படுகிறது.
மாணவி ஆர்த்தி திருப்பரங்குன்றம் தேவஸ்தான பள்ளியில் பதிவு செய்யும் போது, ஏதேனும் தவறுகள் நடைபெற்றிருக்கலாம், பழைய பாடத்திட்டத்தின் படி மாணவி தேர்வுக்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.
இதனால் 600 மதிப்பெண்ணுக்கு பதிலாக 1200 மதிப்பெண்கள் கணக்கில், தேர்வு முடிவு வெளியாகியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.