லண்டன் ஈழத்தமிழர்கள் முன்னிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேச்சு: வீடியோ
பிரித்தானியாவில் ஈழத்தமிழர் மத்தியில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலங்கையில் வடக்கு கிழக்கு மக்களுக்கும், மலையக மக்களுக்கும் நடந்த அநியாயங்கள் உலகில் வேறு எந்த மக்களுக்கும் நடந்ததாக வரலாற்று சான்றுகள் இல்லை என தெரிவித்துள்ளார்.
உலகத்தமிழர் சிவில் சமூக பிரதிநிதிகள் சந்திப்பு
உலகத்தமிழர் சிவில் சமூக பிரதிநிதிகள் இடையிலான சந்திப்பு கூட்டம் பிரித்தானியாவில் சமீபத்தில் நடைபெற்றது, இதில் 2009ல் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சரியான தீர்வு, இலங்கை வாழ் தமிழ் மக்கள் படும் கஷ்டங்களுக்கான தீர்வு, மலையக மக்களுக்கான உரிமை பலப்படுத்தல் மற்றும் இலங்கை இந்திய வாழ் தமிழர்களுக்கான ஆதரவு ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்கள், மலையக மற்றும் ஈழத் தமிழர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு நமது பகிரப்பட்ட மொழி மற்றும் கலாச்சாரத்தை எடுத்து காட்டுவதுடன், இலங்கை மற்றும் இந்தியா வாழ் புலம் பெயர்ந்த தமிழர்கள் இடையிலான வலுவான பிணைப்பை உலகிற்கு காட்டுவதாக உலகத் தமிழர் சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் அண்ணாமலை
பிரித்தானியாவில் உலகத் தமிழர் சிவில் பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை இலங்கையில் வடக்கு கிழக்கு மக்களுக்கும், மலையக மக்களுக்கும் நடந்த அநியாயங்கள் உலகில் வேறு எந்த மக்களுக்கும் நடந்ததாக வரலாற்று சான்றுகள் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இரு இனங்களுக்கும் துரோகம் நிகழ்ந்துள்ளது, அதே நேரம் கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்ட இடங்களும் இந்த இரண்டு இடங்கள் மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உலக சக்திகள் விளையாடும் சதுரங்க ஆட்டத்தில் நகர்த்தப்படும் காய்களாக இலங்கை தமிழர் பிரச்சனை உள்ளது எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் கவலைகள் மற்றும் வேண்டுகோள்களை நிவர்த்தி செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக கட்சி தலைமையுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை நடத்த உலகத் தமிழர் சிவில் சமூகம் வேண்டி நிற்கின்றது என உலகத் தமிழர் சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் தலைவர் அண்ணாமலையில் தொடர்ச்சியான ஆதரவை உலகத் தமிழர் சிவில் சமூக அமைப்பு எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |