இறப்புக்கு முன் உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
இறப்பதற்கு முன்பு தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் வழங்குவோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானம்
இறப்பதற்கு முன்பு உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்து இருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இது உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருவோரின் எண்ணிக்கையை பெரும் அளவு உயர்த்தும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் அறிக்கை
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் X தளத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,”உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.
தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்!” என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |