அண்ணன் அழகிரியை நேரில் சந்திக்கப் போகும் முதல்வர் ஸ்டாலின்?
தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மதுரைக்கு வரவிருக்கும் ஸ்டாலின், அண்ணன் அழகிரியை சந்தித்து வாழ்த்து பெறலாம் என கூறப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது திமுக, இதனை தொடர்ந்து 7ம் தேதி ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார்.
பதவியேற்ற நாளில் இருந்தே, கொரோனா நோய் தடுப்பு பணிகளில் முதல்வரும், அவரது அமைச்சரவையும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு விவரங்களை ஆய்வு செய்வதற்காக ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்து நாளை மதுரையில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதுடன், தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை விரிவாக்கப் பணியை நேரில் பார்த்து ஆய்வு செய்கிறார்.
இதற்காக மதுரை வரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க அமைச்சர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர், இந்நிலையில் மதுரை வரும் ஸ்டாலின் தனது அண்ணன் முக அழகிரியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பதவியேற்பு விழாவின் போது அண்ணனுக்கும் அழைப்பு விடுத்தார் ஸ்டாலின், கொரோனா காலம் என்பதால் அது நிறைவேறாமல் போக, அழகிரியின் மகன் மற்றும் மகள் விழாவில் பங்கேற்றனர்.
எனவே மதுரையில் அண்ணனின் வீட்டிற்கு சென்று வாழ்த்து பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன, இதனால் அழகிரியின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.