கனேடிய பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக தமிழ் கல்விக்கான இருக்கை: பெருமையை பெற்றுள்ள நகரம்
கனடாவாழ் தமிழ் குழுக்களும் ரொரன்றோ பல்கலைக்கழகமும் இணைந்து 2018இல் நிறுவிய, கனேடிய பல்கலைக்கழம் ஒன்றில் முதன்முறையாக தமிழ் கல்விக்கான இருக்கை அமைக்கும் திட்டம், தற்போது போதுமான நிதியும் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து நிஜமாகியுள்ளது.
அதன்படி, நாட்டிலேயே ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை அமைக்கப்படும் முதல் நகரம் என்ற பெருமை, கனடாவின் ரொரன்றோ நகரத்துக்குக் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக தமிழர்கள் அதிகம் வாழும் நாடு கனடாவாகும். 300,000க்கும் அதிகமான தமிழர்கள் தற்போது கனடாவில் வாழ்கிறார்கள். அவர்கள் இந்தியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களாவர்.
இந்த இருக்கை, தமிழ் மொழி மற்றும் கலாசாரம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதோடு, கல்வி உதவித்தொகைகளும் வழங்கும். இத்திட்டத்துக்காக 3 மில்லியன் டொலர்கள் நிதி திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரொரன்றோ பல்கலைக்கழகத்தின் Scarborough கேம்பஸ் தலைவரான Wisdom J Tettey கூறும்போது, இந்த இருக்கையில் தலைவராக அமரவைப்பதற்காக ஒருவரை உலகம் முழுவதும் வலைவீசித் தேட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதற்காக, மிகச்சிறந்த நற்பெயரைப் பெற்றவரும், ஆய்வுகள் மேற்கொள்பவரும்,
அனைத்து வகையிலும் சமுதாயத்துடன் ஒன்றிணைந்து செயலாற்றுபவருமான ஒருவரை தேட
இருப்பதாகவும் அனர் தெரிவித்துள்ளார்.