ஒரு நாளுக்கு ரூ.42 லட்சம் ஊதியம் பெரும் தமிழர் - லாபம் குறைந்தாலும் உயரும் சம்பளம்
மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் டாடா நிறுவனம், தொழில்நுட்பம், ஹோட்டல் என பல துறைகளிலும் ஈடுபட்டுள்ளது.
என். சந்திரசேகரன்
கடந்த 2017 ஆம் ஆண்டு, டாடா நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.
62 வயதான சந்திரசேகரன், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார்.
தனது பள்ளிக்கல்வியை மோகனூரில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த அவர், கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கணினிப் பிரிவில் முதுகலையில் பட்டம் பெற்றுள்ளார்.
1987 ஆம் ஆண்டு, டாடா குழுமத்தின் TCS நிறுவனத்தில் பயிற்சியாளராக வாழ்க்கையை தொடங்கியவர், 2009 ஆம் ஆண்டு அதன் தலைமை செயல் அதிகாரியாக(CEO) நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு முதல் டாடா சன்ஸ் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், டாடா சன்ஸ் நிறுவனம் தனது ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நிறுவனத் தலைவராக என். சந்திரசேகரன் உயர்ந்துள்ளார்.
ஆண்டு ஊதியம்
ரூ.155.81 கோடி டாடா சன்ஸின் ஆண்டு அறிக்கையின் படி, 2024-25 நிதியாண்டில் ரூ.155.81 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என். சந்திரசேகரன்.
இதில், ஊதியம் மற்றும் பிற பலன்கள் மூலம் ரூ.15.1 கோடியும், டாடா குழும நிறுவனங்களின் லாபத்தில் அடிப்படையிலான கமிஷனாக ரூ.140.7 கோடியும் பெற்றுள்ளார். இது கடந்த ஆண்டு அவர் பெற்ற ரூ.135 கோடியை விட 15% அதிகமாகும்.
ஒரு ஆண்டுக்கு 155.81 கோடி ரூபாய் சம்பளம் என்ற கணக்கின் படி பார்த்தா,ல் ஒரு நாளுக்கு ரூ.42,68,767.12 பெறுகிறார்.
2024 நிதியாண்டில் ரூ.34,654 கோடியாக இருந்த டாடா சன்ஸ் நிகர லாபம், 24.3% சரிவை சந்தித்து 2025 நிதியாண்டில் ரூ.26,232 கோடியாக குறைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டில், இன்ஃபோசிஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் ரூ.82 கோடியும், விப்ரோ தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாஸ் பல்லியா ரூ.53.60 கோடியும், டெக் மஹிந்திராவின் தலைமை நிர்வாக அதிகாரி மோஹித் ஜோஷி, ரூ.52.1 கோடியும் பெற்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |