பிரித்தானியர்களுக்கு வரி உயர்வு... சேன்ஸலரின் மனைவிக்கு விதிவிலக்கா?: பிரித்தானியாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள விடயம்
பிரித்தானிய சேன்ஸலரான ரிஷி சுனக் பிரித்தானியர்களுக்கு வரி உயர்வுகளை அறிவித்துள்ள நிலையில், அவரது மனைவி சில வருவாய்களுக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்னும் நிலை உள்ளதால், அது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ரிஷி சுனக்கின் மனைவியான அக்ஷதா மூர்த்தி, இந்திய பணக்காரர்களில் ஒருவரும், இன்ஃபோசிஸ் நிறுவனருமான நாராயணமூர்த்தியின் மகளாவார். அவருக்கு பிரித்தானியாவில் 'non-dom' status அதாவது விரிவாகக் கூறினால் non-domiciled status என்ற நிலை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த 'non-dom' status என்பது, ஒருவர் பிரித்தானியாவில் வாழ்ந்தாலும், அவரது சொந்த நாடு வேறொன்று என்றால், அவருக்கு கொடுக்கப்படும் ஒரு நிலை ஆகும்.
இந்த நிலை உடையவர்கள், வெளிநாடுகளிலிருந்து தங்களுக்கு வரும் வருவாய்க்கு பிரித்தானியாவில் வரி செலுத்தவேண்டியதில்லை.
பிரித்தானியாவில் வாழும் செல்வந்தர்கள் பலர், இந்த 'non-dom' status என்ற நிலையைப் பயன்படுத்தி பெருந்தொகை வரி செலுத்துவதிலிருந்து விலக்குப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், ரிஷி சுனக்கின் மனைவியான அக்ஷதா மூர்த்தியோ, லண்டனில் எண். 1, Downing Street என்ற முகவரியில் தன் கணவரான ரிஷி மற்றும் தங்கள் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். அப்படியிருக்க அவருக்கு 'non-dom' status கொடுக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்த 'non-dom' status அக்ஷதாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதால், அவர் தனக்கு வெளிநாட்டிலிருந்து வரும் வருவாய்க்கு பிரித்தானியாவில் வரி செலுத்தவேண்டியதில்லை. அவருக்கு அவரது தந்தையின் இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து கடந்த ஆண்டு 11.6 மில்லியன் பவுண்டுகள் வருவாய் வந்துள்ளது. அவர் பிரித்தானியாவில் அந்த தொகைக்கு வரி செலுத்துபவராக இருந்தால், அவர் சுமார் 4.4 மில்லியன் பவுண்டுகள் வரி செலுத்தியிருக்கவேண்டும்.
அக்ஷதா மூர்த்தியின் தரப்பில் இது குறித்து கருத்து தெரிவித்த செய்தித்தொடர்பாளர் ஒருவர், அக்ஷதா ஒரு இந்தியக் குடிமகள் என்றும், பிரித்தானியாவிலிருந்து அவருக்கு வரும் வருவாய்க்கு அவர் வரி செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். அக்ஷதா தரப்பில் எந்த விதி மீறலும் நடக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எப்படி இருந்தாலும், 2015ஆம் ஆண்டு கன்சர்வேட்டிவ் அரசு கொண்டு வந்த சட்ட மாற்றங்களில், இந்த 'non-dom' status என்பது, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக தங்கிவிடும் எண்ணம் எதுவுமின்றி பிரித்தானியாவுக்கு வருவதை ஆதரிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.