2500 ஊழியர்களை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்திய TCS: குற்றம் சாட்டும் NITES
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தற்போது Nascent Information Technology Employees Senate அமைப்பின் விமர்சனத்திற்கு இலக்காகியுள்ளது.
ராஜினாமா செய்ய
புனேவில் அமைந்துள்ள TCS நிறுவனம் கிட்டத்தட்ட 2,500 ஊழியர்களை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியதாக NITES குற்றம் சாட்டியுள்ளது.
மராட்டிய முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், பாதிக்கப்பட்ட ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்க உடனடி அரசு தலையிட வேண்டும் என்று NITES தலைவர் ஹர்ப்ரீத் சிங் சலுஜா வலியுறுத்தியுள்ளார்.
NITES விடுத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில், மத்திய தொழிலாளர் அமைச்சகம் இந்த விடயத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிரா தொழிலாளர் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக சலுஜா கூறியுள்ளார்.
மேலும், இந்த உத்தரவு இருந்தபோதிலும் துரதிர்ஷ்டவசமாக, கள யதார்த்தம் இன்னும் வருத்தமளிக்கிறது என்றார். புனேவில் மட்டும், சமீபத்திய வாரங்களில் கிட்டத்தட்ட 2,500 ஊழியர்கள் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் அல்லது திடீரென நீக்கப்பட்டுள்ளனர் என சலுஜா தெரிவித்துள்ளார்.
ஒரு சிறிய பகுதி
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ள TCS, பணியாளர் திறன்களை மறுசீரமைப்பதற்கான உள் முயற்சியின் ஒரு பகுதியாக, ஒரு சிறிய பகுதி ஊழியர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பெரிய அளவிலான கட்டாய ராஜினாமா எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என மறுத்துள்ளது.
TCS நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2 சதவீதம் அல்லது 12,261 ஊழியர்களை இந்த ஆண்டு பணிநீக்கம் செய்ய இருப்பதாக கடந்த ஜூன் மாதத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |