காரின் அடியில் சிக்கிய தலைமை ஆசிரியர்: குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
Head teacher dragged by car man sentenced to 25 years: பள்ளி தலைமை ஆசிரியரை காரில் மோதி இழுத்துச் சென்று கொலை செய்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியரை இழுத்துச் சென்ற கார்
பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர், வார்பர்ட்டன் பகுதியில் கடந்த ஏப்ரல் 20ம் திகதி சைமன் ரிச்சர்ட்சன் என்ற 35 வயது நபர் சிக்னலை மதிக்காமல் காரை வேகமாக இயக்கியுள்ளார்.
அப்போது சாலையில் சைக்கிள் ஓட்டி வந்த 56 வயது பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் முல்லின்ஸ் மீது கார் மோதியது.
மேலும் காரின் அடியில் சிக்கிக் கொண்ட மைக்கேல் முல்லின்ஸ், பல அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். இருந்தும் ரிச்சர்ட்சன் காரை நிறுத்தாமல் 2 கி.மீ வரை காரை தொடர்ந்து இயக்கினார்.

காரின் அடியில் இருந்து முல்லின்ஸ் விடுபட்டதும், காரை பின்னோக்கி இயக்கி அவர் மீது மீண்டும் காரை ஏற்றி விட்டு அங்கிருந்து தப்பி உள்ளார்.
அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ரத்த காயங்களுடன் முல்லின்ஸ் கிடப்பதை பார்த்து அவசர குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர குழுவினர் முல்லின்ஸுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளித்த போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
கைது மற்றும் தண்டனை
காவல்துறையினரின் தீவிரமான சேஸிங்கிற்கு பிறகு அடுத்த நாள் சைமன் ரிச்சர்ட்சன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ரிச்சர்ட்சன் மீது ஏற்கனவே 28 குற்ற வழக்குகள் இருப்பதாகவும், அதில் பல குற்றச்சாட்டுகள் போக்குவரத்தை மீறிய பல குற்றங்களும் அடங்கும் என அரசு வழக்கறிஞர் ஃபில் பார்னஸ் கேசி சுட்டிக்காட்டினார்.
விசாரணை நிறைவுக்கு பிறகு திங்கட்கிழமை இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை வாசித்த நீதிபதி, இந்த செயல் மனித உயிருக்கு எந்தவொரு மதிப்பும் தராத அதிர்ச்சியூட்டும் கொடூரம் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் குற்றவாளியான சைமன் ரிச்சர்ட்சனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.