பிரான்சில் மற்றொரு ஆசிரியர் மாணவர்களுக்கு காட்டிய படத்தால் மீண்டும் சர்ச்சை
பிரான்சில், ஆசிரியர் ஒருவர் வகுப்பில் முகம்மது நபியின் புகைப்படத்தை காட்டியது தொடர்பாக எழுந்த சர்ச்சை, அந்த ஆசிரியரின் கொலையில் முடிந்ததும், அதனால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்ததும் நினைவிருக்கலாம்.
மீண்டும் ஒரு சர்ச்சை
இந்நிலையில், ஆசிரியர் ஒருவர் வகுப்பில் காட்டிய படம் ஒன்றால் மீண்டும் பிரான்சில் சர்ச்சை உருவாகியுள்ளது. புகழ் பெற்ற ஓவியரான Giuseppe Cesari என்பவர் வரைந்த Diana and Actaeon என்னும் ஓவியமே தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அதற்குக் காரணம், அந்த ஓவியத்தில் இருக்கும் பெண்கள் யாருமே ஆடை அணியவில்லை. அந்த ஆசிரியர், அந்த ஓவியத்தை 11, 12 வயதுடைய மாணவ மாணவியருக்கு காட்டியுள்ளார்.
சில மாணவர்கள் அந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், சிலர் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. சில மாணவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக தங்கள் பெற்றோரிடம் புகாரளிக்க, பெற்றோர் பள்ளி தலைமையாசிரியரிடம் புகாரளித்துள்ளார்கள்.
ஆசிரியர்களுக்கு எழுந்துள்ள அச்சம்
ஏற்கனவே சாமுவேல் ( Samuel Paty) என்னும் ஆசிரியர் முகம்மது நபியின் கேலிச்சித்திரங்களை வகுப்பில் காட்டியது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், 18 வயது செசன்ய நாட்டவரான Abdullakh Anzorov என்ற இளைஞர் ஆசிரியரை தலையைத் துண்டித்துக் கொலை செய்துவிட்ட நிலையில், தற்போது எழுந்துள்ள பிரச்சினையால் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளார்கள்.
இந்த ஆசிரியருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளதால் அச்சம் வலுத்துள்ளது.
பிரச்சினையில் தலையிட்ட அமைச்சர்
இந்நிலையில், பிரான்ஸ் கல்வி அமைச்சரான கேப்ரியல் (Gabriel Attal), ஆசிரியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பும் மற்றும் தவறாக குற்றச்சாட்டுகளைக் கூறும் மாணவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் அவர்.
அது என்ன ஓவியம்?
உண்மையில், அந்த ஆசிரியர் கலை வகுப்பில் அந்த ஓவியம் குறித்து பேசியுள்ளார். புகழ் பெற்ற ஓவியரான Giuseppe Cesari என்பவர் வரைந்த Diana and Actaeon என்னும் அந்த ஓவியம், 14 முதல் 17ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் வரையப்பட்ட புகழ் பெற்ற ஓவியமாகும். அதன் பின்னால் ஒரு கதை உள்ளது.
இளம்பெண்களை பாதுகாப்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே வாழ்வது என முடிவு செய்த வன ராணியான ஆர்ட்டிமிஸ் என்னும் டயானா, ஒருநாள் தன் தோழிகளுடன் ஆடையில்லாமல் குளித்துக்கொண்டிருந்திருக்கிறாள்.
அப்போது வேட்டையாடுவதற்காக காட்டுக்கு வந்த இளவரசரனான அக்டேயான் (Actaeon) குளித்துக்கொண்டிருந்த டயானாவைப் பார்த்து அவள் அழகில் பயங்கிவிட்டிருக்கிறான்.
உடனே டயானா, நீ என்னைப் பார்த்ததை, உன்னால் யாரிடமும் சொல்லமுடியாமல் போகட்டும் என சபிக்க, அக்டேயான் திரும்பி ஓடத்துவங்கியிருக்கிறான்.
ஆனால், அவனுக்கு, தான் நான்கு கால்களில் ஓடுவது தெரியவில்லை. ஆம், டயானாவின் சாபத்தால் அவன் ஒரு மிருகமாக மாறிவிட்டான். வேட்டைக்கு வந்த வேட்டை நாய்கள் மிருகமாக மாறிய அக்டேயான் மீது பாய்ந்து அவனைச் சின்னாபின்னமாக்க, அக்டேயானுடைய வாழ்வு பரிதாபமாக முடிந்துபோனதாக அந்தக் கதை முடிவடைகிறது.
விடயம் என்னவென்றால், இந்த படத்தை அந்த ஆசிரியர் காட்டியது 11 முதல் 12 வயது வரையுள்ள பிள்ளைகளுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |