பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல்
இலங்கையைச் சேர்ந்த மென்பொருள் பொறியியல் பட்டதாரி ஒருவர், வேலையை இழந்ததால் தன் கிராமத்தில் ஒரு பல்பொருள் அங்காடியைத் தொடங்க முடிவு செய்ததும், அதன் பின்னணியை விளக்கி லிங்க்ட்இன் தளத்தில் பகிர்ந்துகொண்டது பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
தொழில் பாதையை
தனது கிராமத்தில் ஒரு பல்பொருள் அங்காடியைத் தொடங்கியதால், மூன்று மாதங்களுக்குள்ளேயே நாளொன்றுக்கு 50,000 ரூபாய்க்கும் அதிகமான விற்றுமுதலை எட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த லிங்க்ட்இன் தளத்தில் தொழில்முனைவோரான சமித சுலக்கண, எதிர்பாராத பணிநீக்கம் எவ்வாறு அவரைத் தனது தொழில் பாதையை மறுபரிசீலனை செய்யத் தூண்டியது என்பதை விவரித்துள்ளார்.
மென்பொருள் துறையுடன் தொடர்ந்து இணைந்திருக்க அவர் விரும்பினாலும், கிடைத்த இந்தத் தோல்வி, தன் சொந்த ஊருக்கு அருகிலேயே இருந்த ஒரு வாய்ப்பைத் தொடர அவரைத் தூண்டியதாகக் கூறினார்.
சுலக்கணவின் பதிவில், சில மாதங்களுக்கு முன்பு, எனது நிறுவனத்தில் நடந்த ஒரு பெரிய ஆட்குறைப்பால் நான் பாதிக்கப்பட்டேன். பல தொழில் வல்லுநர்களைப் போலவே, நானும் திடீரென்று எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டேன்.
ஒரு மென்பொருள் பொறியியல் பட்டதாரியாக, எனது தொழில் வாழ்க்கையை எப்போதும் தொழில்நுட்பத் துறையிலேயே அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கனவு கண்டேன். மென்பொருள் பொறியியல் இன்றும் என் பேரார்வமாக உள்ளது, மேலும் நான் அதனுடன் தொடர்ந்து இணைந்திருக்க விரும்புகிறேன்.
இருப்பினும், இந்த சவாலான காலகட்டத்தில், வாய்ப்புகள் நாம் எதிர்பார்க்கும் வடிவத்தில் எப்போதும் வருவதில்லை என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.
மற்றொரு தொழில்நுட்பப் பணிக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக, உள்ளூர் சந்தையில் ஒரு வெற்றிடம் இருப்பதாகத் தாம் கருதியதைக் கண்டறிந்த பிறகு, அவர் தனது கிராமத்தில் ஒரு தொழிலைத் தொடங்க முடிவு செய்தார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு
சுலக்கண கூறுகையில், அவரது கிராமத்தில் மக்களுக்குச் சேவை செய்ய எந்த மினி சூப்பர்மார்க்கெட்டும் இல்லாததால், அவரே முதலீடு செய்து ஒன்றை ஆரம்பித்தார். தனது மென்பொருள் பின்னணியைப் பயன்படுத்தி, அன்றாடச் செயல்பாடுகளில் தொழில்நுட்பத்தை இணைப்பதன் மூலம், தனது வணிகம் ஒரு வழக்கமான உள்ளூர்க் கடையிலிருந்து மாறுபட்டு இயங்க வேண்டும் என்று விரும்பியதாக அவர் கூறினார்.
முதல் முயற்சியாக, வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே வசதியாக ஒர்டர்களைச் செய்ய அனுமதிக்கும், பணம் செலுத்திப் பெறும் (COD) வசதியுடன் கூடிய ஒரு எளிய ஒன்லைன் ஒர்டர் செய்யும் முறையை நான் உருவாக்கினேன்.

இந்த அணுகுமுறை, அந்த வணிகம் விரைவாக வளர்ச்சி அடைய உதவியது என அவர் பதிவு செய்துள்ளார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, அந்த வணிகத்தின் தினசரி வர்த்தகம் ரூ. 50,000-ஐத் தாண்டியுள்ளது.
அத்துடன், வாடிக்கையாளர்களுடன் தினமும் உரையாடுவதன் மூலமும், எனது சமூகத்தின் தேவைகளைப் புரிந்துகொள்வதன் மூலமும் நான் மதிப்புமிக்க புரிதல்களைப் பெற்றுள்ளேன் என்றார்.
மேலும், பல்பொருள் அங்காடியுடன் சேர்த்து சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகத் தொழிலையும் தொடங்கி, மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுலக்கணவின் அந்தப் பதிவிற்கு லிங்க்ட்இன் பயனர்களிடமிருந்து ஆதரவான பதில்கள் கிடைத்தன; அவர்களில் பலர், வேலையை இழந்த பிறகு ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான அவரது முடிவைப் பாராட்டினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |