பெற்றோர் உட்பட குடும்பத்தில் நால்வரை கொன்று புதைத்த இளைஞர்: பகீர் கிளப்பிய சம்பவத்தின் பின்னணி
பெற்றோர் உட்பட குடும்பத்தில் நால்வரை கொன்று புதைத்ததாக கூறி 19 வயதேயான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தின் மால்டா பகுதியை சேர்ந்த ஆசிப் முஹம்மது என்பவரையே 21 வயதான சகோதரர் ஆரிப் முஹம்மது என்பவரது புகாரின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
பெற்றோர், சகோதரி மற்றும் பாட்டியையும் ஆசிப் கொலை செய்து குடியிருப்பினருகே அமைந்துள்ள கிடங்கு ஒன்றில் புதைத்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் சகோதரர்கள் இருவரையும் விசாரித்து வருகின்றனர். மட்டுமின்றி, சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிடங்கிலும் ஆய்வு மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆசிப் தம்மை கொலை செய்ய முயன்ற நிலையிலேயே, தாம் முன்னர் நடந்த சம்பவங்களை பொலிசாரிடம் புகாராக தெரிவித்ததாக ஆரிப் தெரிவித்துள்ளார்.
பயம் காரணமாக நடந்தவற்றை தாம் பொலிசாரிடம் தெரிவிக்கவில்லை எனவும் ஆரிப் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 28ம் திகதி பெற்றோர் உள்ளிட்ட நால்வரை வெள்ளத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் உடல்களை குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கிடங்கில் புதைத்துள்ளார். கொல்லப்பட்ட நால்வரையும் கடந்த சில மாதங்களாக தாங்களும் அப்பகுதியில் கண்டதில்லை என அக்கம் பக்கத்தினரும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆசிப் தனக்காக மடிக்கணினி ஒன்றை வாங்கித் தரக் கேட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் வீட்டை விட்டும் வெளியேறியுள்ளார்.
ஆனால் ஆசிப் கேட்டிருந்த அதே மடிக்கணினியை பெற்றோர் வாங்கி அளித்துள்ளனர். இருப்பினும், பணத் தேவைகளுக்கான நிலம் உட்பட விற்க முயன்ற நிலையில் பெற்றோருக்கும் அவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் இதுவரை உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை என்றே தெரிய வந்துள்ளது.