காரில் 2 கி.மீ தொலைவு இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்: பொதுமக்கள் உதவி நாடும் அதிகாரிகள்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நபர் ஒருவர் 15 வயது இளைஞரை சாலையூடாக காரில் 2 கி.மீ தொலைவு இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ ரீதியான கோமாவில்
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளைஞர் தற்போது மருத்துவ ரீதியான கோமாவில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நியூ சவுத் வேல்ஸ் பொலிசார் தெரிவிக்கையில்,
வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் காரில் அமர்ந்திருந்த 19 வயது நபரும், 15 வயது இளைஞனும் பிளாக்டவுனில் உள்ள தெருவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் சட்டென்று காருடன் அந்த நபர் கிளம்ப, தவறி விழுந்த அந்த 15 வயது இளைஞர் காருடன் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். சுமார் 2 கி.மீ தொலைவு இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், அந்த இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பிளாக்டவுன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட, அங்கிருந்து வெஸ்ட்மீட் சிறார்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மிக ஆபத்தான நிலையில் இருந்தாலும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்றே மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உதவ வேண்டும்
இந்த நிலையில் அந்த இளைஞர் மீட்கப்பட்ட பகுதியில் இருந்தே சம்பவத்தில் தொடர்புடைய காரையும் பொலிசார் மீட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சாரதி கைது செய்யப்பட்டு, மிக ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியதாக வழக்கும் பதியப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, பிணை மறுக்கப்பட்டதுடன், சனிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் நேரில் பார்த்த மக்கள் அல்லது இந்த காட்சியை படமாக்கியவர்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை பொலிஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |