சிறார்களுக்கு தடுப்பூசி அளிப்பது குடும்பத்தில் பிரச்சனையை உருவாக்கும்: சுவிஸ் நிபுணர்கள் கருத்து
சுவிட்சர்லாந்தில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும் திட்டம் துவங்கப்பட இருப்பதாக வெளியான தகவலை அடுத்து நிபுணர்கள் தங்கள் கருத்தை முன்வைத்துள்ளனர்.
சுவிஸில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என்றே தெரிய வந்துள்ளது.
சிறார்களுக்காக பைசர் நிறுவனம் சிறப்பு டோஸ்களை உருவாக்கியுள்ளது. சுவிஸ் மட்டுமின்றி உலக நாடுகளில் இதே வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி அளிப்பதற்கான திட்டத்துடன் மாடர்னா நிறுவனமும் ஜூன் முதல் களமிறங்க உள்ளது.
இந்த நிலையில், சுவிஸில் தடுப்பூசிக்கு எதிரான மன நிலை சிறார்களில் எழுந்துள்ளதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள கட்டாயப்படுத்தி வரும் நிலையில், சிறார்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் சில பெற்றோர்கள், 12 வயது சிறார்களுக்கு தடுப்பூசி தொடர்பில் எதுவும் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாத போது அவர்களை கட்டாயப்படுத்துவது சரியா என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இப்படியான சூழல் கண்டிப்பாக குடும்பங்களில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.