திருடுவதற்காக இளைஞரின் வீட்டுக்குள் நுழைந்த இளம்பெண்கள்... முடிவில் நடந்த எதிர்பாராத திருப்பம்
அமெரிக்காவில், செல்வந்தரான இளைஞர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த இளம்பெண்கள் இருவர், அவரது துப்பாக்கிகளையே காட்டி அவரை மிரட்டி, அவரது விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை திருட முயன்று தோற்ற சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
ப்ளோரிடாவிலுள்ள, Miami Dade County என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த இளைஞரின் வீட்டிலுள்ள லிப்டில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமெராவில், இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
பார்ட்டிக்குச் செல்வதுபோல் உடையணிந்த அந்த இரண்டு இளம்பெண்களும் அவரை ஏமாற்றி அவரது வீட்டுக்குள் நுழைந்தார்களோ என்னவோ தெரியவில்லை. அவரது வீட்டிலிருந்த துப்பாக்கிகளையே எடுத்துக்கொண்டு, அவரது பல்லாயிரம் டொலர்கள் மதிப்புடைய ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை திருடிக்கொண்டு அந்த பெண்கள் இருவரும் அவரது வீட்டிலிருந்து வெளியேற முயல்வதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
ஆனால், அந்த பெண்கள் தன் வாட்சைத் திருட முயன்றதால் கோபமடைந்த அந்த இளைஞர் சற்றும் பயப்படாமல், அந்த வாட்சைத் திரும்பப் பெறுவதிலேயே குறியாக இருக்கிறார். அவர் தொடர்ந்து அந்த பெண்களுடன் வாதிட, ஒரு பெண் அவரது நெஞ்சில் துப்பாக்கியை வைத்தும், அதைத் தட்டிவிட்டுவிட்டு தொடர்ந்து வாதிடுகிறார் அவர்.
ஒரு கட்டத்தில், இந்த ஆள் நம்மை விடமாட்டான் போல இருக்கிறதே என்ற பயம் அந்த பெண்களைத் தொற்றிக்கொள்ள, அங்கிருந்து தப்ப முயல்கிறார்கள் அந்த பெண்கள்.
இப்போது, திருடவேண்டும் என்ற ஆசையை விட, தப்பிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்க, சட்டென ஒரு பெண் அந்த வாட்சை வீசியெறிய, மற்ற பெண் துப்பாக்கியை வீசி எறிகிறார். அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே, அவர் வாட்சை எடுக்க செல்ல, தப்பித்தோம் பிழைத்தோம் என லிப்டுக்குள் ஏறித் தப்புகிறார்கள் அந்த பெண்கள். அதில் ஒரு பெண் லிப்டின் பக்கச் சுவற்றில் சாய்ந்து நிம்மதி பெரூமூச்சு விடுவதைக் காணலாம்.
தான் சந்தித்த இந்த விரும்பத்தகாத அனுபவத்தை மற்றவர்களை எச்சரிக்கும் வகையில் உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார் அந்த இளைஞர்.