சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதற்கான விதிமுறைகள் இன்று முதல் நெகிழ்த்தல்: புதிய விதிமுறைகள் என்னென்ன?
சுவிட்சர்லாந்துக்குள் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதற்கான விதிமுறைகள் நெகிழ்த்தப்பட்டுள்ளன.
இன்று முதல், அதாவது, 20.12.2021 திங்கட்கிழமை முதல், சுவிட்சர்லாந்துக்குள் நுழைவோர் ஏதாவது ஒரு வகை கொரோனா பரிசோதனை முடிவைக் காட்டினால் போதும், (அதாவது பிசிஆர் அல்லது ஆன்டிஜன் வகை கொரோனா பரிசோதனை முடிவுகளில் ஏதாவது ஒன்றைச் செய்து, தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை நிரூபிக்கவேண்டும்).
பிசிஆர் வகை கொரோனா பரிசோதனையைப் பொருத்தவரை, அது சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆன்டிஜன் வகை கொரோனா பரிசோதனை என்றால், அது சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதற்கு 24 மணி நேரத்திற்குள் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
இதற்கு முன் சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதற்கு பிசிஆர் பரிசோதனை முடிவுகள் அவசியம் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிசிஆர் அல்லது ஆன்டிஜன் வகையில், ஏதாவது ஒருவகை பரிசோதனை செய்திருந்தாலும், (கொரோனா தொற்று இல்லை என்னும்) பரிசோதனை முடிவு ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து விடுபட்டவர்கள், சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்தபின் 4 முதல் 7 நாட்களுக்குள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், கொரோனா தடுப்பூசி பெறாதவர்களும், இதற்கு முன் கொரோனா தொற்றுக்கு ஆளாகாதவர்களும் சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்தபின் 4 முதல் 7 நாட்களுக்குள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.
இந்த விதிமுறைகள், 2022 ஜனவரி 24 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், நாட்டில் கொரோனா சூழலைப் பொருத்து விதிமுறைகள் நீட்டிக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.