கதாநாயகனின் துப்பாக்கி வெடித்து பெண் ஒளிப்பதிவாளர் மரணம் இயக்குநர் படுகாயம்: வெளிநாடு ஒன்றில் படப்பிடிப்பில் பயங்கரம்
அமெரிக்காவில் சினிமா படப்பிடிப்பு ஒன்றின்போது கதாநாயகன் பயன்படுத்திய துப்பாக்கி வெடித்ததில் பெண் ஒளிப்பதிவாளர் கொல்லப்பட்டார், இயக்குநர் படுகாயமடைந்தார்.
அமெரிக்காவிலுள்ள Santa Fe என்ற இடத்தில், பிரபல நடிகரான அலெக் பால்ட்வின் (Alec Baldwin, 68) நடிக்கும் Rust என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று மதியம் கதாநாயகன் துப்பாக்கியால் சுடுவது போன்ற ஒரு காட்சியின்போது, துப்பாக்கி வெடித்ததில், திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான Halyna Hutchins (42) மற்றும் இயக்குநர் Joel Souza (48) ஆகியோர் மீது குண்டுகள் பாய்ந்துள்ளன.
உடனடியாக இருவரும் ஹெலிகொப்டர் மூலம் நியூ மெக்சிகோ என்ற இடத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனையில், Halynaவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். Halyna வளர்ந்து வரும் ஒரு பெண் ஒளிப்பதிவாளர் ஆவார்.
மேலும் தோள்பட்டையில் குண்டு பாய்ந்த இயக்குநர் Joelக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அந்த குண்டுகள், கதாநாயகன் அலெக் பயன்படுத்திய துப்பாக்கியிலிருந்துதான் வெளிப்பட்டன என்பது உறுதியாகியுள்ள நிலையில், அவர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
அந்த துப்பாக்கியில் நிஜ குண்டுகள் இருந்தனவா? அப்படியானால் அவற்றை துப்பாக்கியில் லோட் செய்தது யார், அல்லது போலி குண்டுகளே உயிரைப் பறித்தனவா என்பது தெரியவில்லை.
உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.