டி20 உலகக்கோப்பை! பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடிய இந்திய மாணவர்கள் மீது தீவிரவாத வழக்குப்பதிவு
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடிய ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மீது தீவிரவாத வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதற்காக, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவ மாணவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (UAPA) பொலிசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை கொண்டாடிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன, பல பகுதிகளில் பட்டாசுகளும் வெடித்தன.
எனவே இது தொடர்பாக கரண் நகர் மற்றும் சௌரா காவல் நிலையங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்கிம் செளரா கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சூழலில், மனிதாபிமான அடிப்படையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுமாறு லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவிடம் ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.