பிரான்சுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரிப்பு: நீதித்துறை அதிகாரி எச்சரிக்கை
பிரான்சுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக நீதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஈராக், சிரியா பகுதியிகளிலிருந்து வரும் தனிநபர்கள் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்கிறார் அவர்.
ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் தீவிரவாதிகளால் பிரான்சுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் தேசிய தீவிரவாத எதிர்ப்பு விசாரணை அதிகாரி எச்சரித்துள்ளார்.
பிரான்ஸ் தேசிய தீவிரவாத எதிர்ப்பு விசாரணை அதிகாரியாகிய Jean-Francois Ricard, ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றின்போது, தீவிரவாதிகள் மையமாகக் கொண்டு செயல்படும் ஈராக், சிரிய பகுதியிலிருந்து வரும் தனிநபர்கள் பிரான்ஸ் நாட்டில் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை என்றார்.
2016 Bastille தினக் கொண்டாட்டங்களின்போது, Nice நகரில், ட்ரக் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய எட்டு சந்தேக நபர்கள் மீது விசாரணைத் துவங்க இருக்கும் நிலையில், Ricardஉடைய கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
AFP/File
2020க்குப் பிறகு பிரான்சுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக Ricard தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக ஈராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் அமைப்பு மீண்டும் சில இடங்களைக் கைப்பற்றி வருகிறது, ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு வருகிறது என்பதை நம்மால் காணமுடிகிறது என்றார் அவர்.
அத்துடன், தீவிரவாத தொடர்புடைய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாவது இன்னொரு பிரச்சினை என்று கூறும் Ricard, அப்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் பலர் தங்கள் குற்றச்செயல்களை கைவிடுவதில்லை என்கிறார்.
ஆனாலும், பிரான்சின் நீதித்துறையும், உளவுத்துறையும் அப்படி விடுவிக்கப்பட்டவர்கள் மீது எப்போதுமே ஒரு கண் வைத்திருக்கும் என்று கூறியுள்ளார் அவர்.