130 பேரை பலிகொண்ட பிரான்சை அதிரவைத்த தீவிரவாத தாக்குதல்: பிரம்மாண்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது
நவயுக பிரான்ஸ் வரலாற்றின் மிகப்பெரிய வழக்கு விசாரணை என கருதப்படும் 2015 பாரீஸ் தீவிரவாத தாக்குதல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 13ஆம் திகதி, இஸ்லாமியவாத தீவிரவாதிகள், பிரான்ஸ் தலநகர் பாரீஸில் தாக்குதல் நடத்தினார்கள். வெடிகுண்டு தாக்குதல், மனிதவெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கிச்சூடு என அவர்கள் நடத்திய அராஜகச் செயல்களில் 130 பேர் கொல்லப்பட்டார்கள், ஏராளமானோர் காயமடைந்தார்கள்.
ஒன்பது மாதங்களாக பரபரப்பாக நடந்துவந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தாக்குதல் நிகழ்த்திய 10 பேர் அடங்கிய தீவிரவாதக் குழுவில், ஒன்பது பெரும் கொல்லப்பட்ட நிலையில், Salah Abdeslam என்பவன் மட்டும் உயிருடன் பிடிபட்டான். தான் கடைசி நேரத்தில் மனம் மாறிவிட்டதாகவும், அதனால்தான் தான் உடலில் அணிந்திருந்த குண்டுகள் பொருத்தப்பட்ட சட்டையைக் கழற்றிவிட்டதாகவும் அவன் கூறியிருந்தான்.
ஆனால், நிபுணர்கள் அந்த வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட உடையை ஆய்வு செய்தபோது, அதில் பழுது இருந்ததால் அது வெடிக்கத் தவறியதும், தான் மனம் மாறிவிட்டதாக Abdeslam கூறியது பொய் என்றும் தெரியவந்தது.
Abdeslamக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகள் சிறையில் கழித்தபிறகும்கூட அவனுக்கு ஜாமீன் கிடைப்பது கடினமே என கூறப்படுகிறது.
மேலும், இந்த தாக்குதல்களுக்கு உதவியாக இருந்த 19 பேருக்கு வெவ்வேறு அளவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.