பள்ளிக்குள் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு! ஆசிரியை பரிதாப பலி
காஷ்மீரில் அரசுப் பள்ளிக்கூடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியை பலியானார்.
ஜம்முவின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்னி பாலா(36) என்ற பெண், காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இன்று காலை பள்ளியில் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள் ராஜ்னி பாலாவை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.
மேலும் பலர் படுகாயமடைந்தனர். அதன் பின்னர் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு ஓடி வந்த சக ஆசிரியர்கள், ராஜ்னியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆசிரியை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Photo Credit: India Today/Ashraf Wani
இச்சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு படையினர், பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதியை சுற்றி வளைத்தனர். மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து மக்கள் மாநாட்டு தலைவர் சஜாத் லோனே கூறுகையில், 'மீண்டும் கோழைத்தனம், வெட்கமற்ற ஆழத்திற்குச் சரிந்துவிட்டது. குல்காமில் சம்பா பகுதியைச் சேர்ந்த ஒரு ஆசிரியையான ஒரு அப்பாவி பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்' என தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தில் காஷ்மீரில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் பொதுமக்கள், மூவர் பணியில் இல்லாத பொலிஸார் ஆவார். தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் காஷ்மீரில் பதற்றம் அதிகரித்துள்ளது.