மரத்தின் மீது மோதி தீப்பிடித்த டெஸ்லா டாக்சி கார்: பிரித்தானியாவில் 2 இளைஞர் பலி
பிரித்தானியாவில் மரத்தின் மீது மோதி கார் தீப்பிடித்ததில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்து
சனிக்கிழமை பிரித்தானியாவின் சர்ரே(Surrey) பகுதியில் டாக்ஸி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இரவு 10 மணியளவில் ஆக்ஸ்டெட்(Oxted) பகுதிக்கு அருகே ஹர்ஸ்ட் கிரீன், ஹாலந்து சாலையில் லண்டனை நோக்கிச் சென்ற வெள்ளை நிற டெஸ்லா(Tesla) கார் ஒன்று சாலையில் இருந்து விலகி திடீரென மரத்தில் மோதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
மற்றொரு டாக்ஸியில் வந்த நண்பர்கள், உடனடியாக காரில் சிக்கியிருந்த நண்பர்களை வெளியே இழுத்தனர், இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் 2 இளைஞர் உயிரிழந்தனர்.

மேலும் மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓட்டுநர் கைது
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக டாக்சி ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
30 வயதுடைய ஆக்ஸ்டெட் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக விவரம் தெரிந்தவர்கள் யாரேனும் இருப்பின் 101 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |