டெஸ்லா வருவாய் 71 சதவீதம் சரிவு... அதிரடியாக எலோன் மஸ்க் எடுத்த முடிவு
டெஸ்லா நிறுவனத்தில் கவனம் செலுத்துவதற்காக மே மாதத்தில் இருந்து தனது ட்ரம்ப் நிர்வாகப் பணிகளை கணிசமாகக் குறைக்க இருப்பதாக எலோன் மஸ்க் செவ்வாயன்று அறிவித்தார்.
ட்ரம்புடனான நெருக்கம்
மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லா நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 71 சதவீதம் சரிந்துள்ளது. அடுத்த மாதத்தில், DOGE-க்கான தனது நேர ஒதுக்கீடு கணிசமாகக் குறையும் என்று மஸ்க் முதல் முறையாக தெரிவித்துள்ளார்.
டெஸ்லா வாகன விற்பனையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து அந்த நிறுவனம் 409 மில்லியன் டொலர் லாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளது. ஆனால், ஜனாதிபதி ட்ரம்புடனான நெருக்கம் காரணமாகவே டெஸ்லா நிறுவனத்தின் வருவாய் சரிவடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வருவாய் ஒன்பது சதவீதம் குறைந்து 19.3 பில்லியன் டொலராக இருந்தது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் குறைந்த விலை மொடல்கள் உட்பட புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக டெஸ்லா அறிவித்துள்ளது.
குறிப்பிடத்தக்க சேதம்
உலகின் பெரும் கோடீஸ்வரரான எலோன் மஸ்க், ட்ரம்பின் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக்காக 270 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை நன்கொடையாக அளித்திருந்தார்.
DOGE அமைப்பில் மஸ்கின் செயற்பாடுகள் டெஸ்லா நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் அப்போதே எச்சரித்திருந்தனர். ட்ரம்ப் ஜனாதிபதி பொறுப்புக்குத் திரும்பியதிலிருந்து, டெஸ்லா மீது வாடிக்கையாளர் புறக்கணிப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சிக்கு இலக்காகியுள்ளது, அதே நேரத்தில் பல நாடுகளின் சந்தைகளில் விற்பனை சரிந்துள்ளது.
மட்டுமின்றி, பயன்படுத்தப்பட்ட டெஸ்லா கார்களின் விலைகள் வரலாறு காணாத சரிவை எதிர்கொண்டது. இறுதியில், வருவாய் இழப்பை எதிர்கொண்டதன் பின்னர் DOGE-க்கான தனது நேர ஒதுக்கீடு இனி குறையும் என எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |