முக்கிய ஐரோப்பிய சந்தைகளில் எலோன் மஸ்க்கின் டெஸ்லா விற்பனை கடும் வீழ்ச்சி
டிசம்பர் மாதத்தில் சில ஐரோப்பிய சந்தைகளில் டெஸ்லா வாகனப் பதிவுகள் சரிவடைந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் அந்தப் பிராந்தியத்தில் டெஸ்லாவின் சந்தைப் பங்கு கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.
டெஸ்லா விற்பனை
ஆனால், மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதில் முன்னணியில் இருக்கும் நார்வேயில், டெஸ்லா விற்பனை சாதனை அளவை எட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து ஐரோப்பாவில் போட்டி தீவிரமடைந்துள்ளதால், எலோன் மஸ்க்கின் டெஸ்லா பிராண்டின் விற்பனை மந்தமாகியுள்ளது.
மட்டுமின்றி, அதன் உரிமையாளர் மஸ்க் ஐரோப்பிய வலதுசாரி அரசியல் பிரமுகர்களைப் புகழ்ந்தது பொதுமக்களின் எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது. இந்த நிலையில், டெஸ்லா நிறுவனம் வெள்ளிக்கிழமை அன்று, உலகளாவிய நான்காம் காலாண்டு விநியோக எண்ணிக்கையில் எதிர்பார்த்ததை விடக் கடுமையான சரிவு ஏற்பட்டதாகவும் அறிவித்தது.
அதாவது 1.5 சதவீத வீழ்ச்சியை டெஸ்லா பதிவு செய்துள்ளது. மட்டுமின்றி, சந்தையை மீண்டும் மீட்டெடுக்கும் நோக்கில் ஐரோப்பா முழுவதும் டெஸ்லாவின் மாடல் Y மற்றும் மாடல் 3 கார்களின் மலிவான பதிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அதன் வணிகம் இன்னும் மீட்சி அடையவில்லை.
ஜேர்மனி மற்றும் பிரித்தானியாவிற்குப் பிறகு ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய கார் சந்தையான பிரான்சில், விற்பனையின் ஒரு குறியீடாகக் கருதப்படும் டெஸ்லா வாகனப் பதிவுகள், கடந்த மாதம் 66 சதவீதம் சரிந்து 1,942 வாகனங்களாகக் குறைந்தன.

2025 ஆம் ஆண்டில் பிரான்சில் ஒட்டுமொத்தமாக டெஸ்லா முன்பதிவுகள் 37 சதவீதம் குறைந்தன. ஸ்வீடனில், டிசம்பர் மாதத்தில் டெஸ்லா வாகனப் பதிவுகள் 71 சதவீதம் சரிந்து 821 ஆகக் குறைந்தன, இதனால் 2025 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 70 சதவீதம் சரிவுக்கு வழிவகுத்தது.
சுமார் 25% சரிவடைந்தன
போர்ச்சுகல் (13%), ஸ்பெயின் (44%) மற்றும் பெல்ஜியத்திலும் (28%) கடும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டு முழுவதிலும், போர்ச்சுகலில் விற்பனை 22%, ஸ்பெயினில் 4% மற்றும் பெல்ஜியத்தில் 53% சரிந்தது.
இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில் டெஸ்லா கார்களின் பதிவு முறையே டிசம்பர் மாதத்தில் 85% அதிகரித்து 2,519 ஆகவும், 76% அதிகரித்து 1,570 ஆகவும் இருந்தபோதிலும், 2025 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக முறையே 18% மற்றும் 28% சரிவைக் கண்டன.

ஆனால், நார்வேயில், டெஸ்லா வாகனப் பதிவுகள் டிசம்பர் மாதத்தில் முந்தைய ஆண்டை விட 89% அதிகரித்து, 5,679 வாகனங்களாக உயர்ந்தன.
வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்ட எட்டு நாடுகளில், ஐரோப்பாவில் டெஸ்லாவின் சந்தையில் பாதிக்கும் மேற்பட்ட பங்கைக் கொண்டுள்ள அந்த நாடுகளில், 2025-ஆம் ஆண்டில் பதிவுகள் ஒட்டுமொத்தமாக சுமார் 25% சரிவடைந்தன என்றே தெரிய வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |