சென்னையில் முதல் ஷோரூமை திறக்க உள்ள டெஸ்லா
tesla to open experience centre in chennai: பிரபல மின்சார கார் நிறுவனமான டெஸ்லா, சென்னையில் தனது முதல் ஷோரூமை திறக்க உள்ளது.
சென்னையில் டெஸ்லா ஷோரூம்
உலகின் பிரபல மின்சார கார் நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் தனது எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் ஒன்றை இந்த வாரத்தில் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது, ஹைதராபாத் மற்றும் பெங்களூரை தொடர்ந்து, தென் இந்தியாவில் அமைய உள்ள டெஸ்லாவின் 3வது எக்ஸ்பீரியன்ஸ் மையம் ஆகும்.
மேலும், இதன் மூலம் இந்தியாவில் டெஸ்லாவின் ஷோரூம் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்கள் நேரடியாக வாகனங்களைப் பார்வையிடவும், ஓட்டிப் பார்க்கவும் மற்றும் முன்பதிவு செய்யவும் ஏதுவாக இந்த ஷோரூம் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. 2026 ஆம் ஆண்டில் மட்டும் BMW, Mercedes-Benz, Porsche, Volvo, BYD உள்ளிட்ட முன்னணி சொகுசு நிறுவனங்களின் 800 சொகுசு மின்சார கார்கள் உட்பட 19,700 க்கும் மேற்பட்ட மின்சார கார்கள் தமிழ்நாட்டில் விற்பனையாகியுள்ளது.
டெஸ்லா இந்த ஆண்டில் இந்தியா முழுவதும் 600க்கும் மேற்பட்ட கார்களை விற்பனை செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 38 கார்களை விற்பனை செய்துள்ளது.
இந்தியாவில் கிடைக்கும் 2 மொடல்கள்
டெஸ்லா, இந்தியாவில் 'Model Y Premium (RWD)' மற்றும் 'Model Y L (AWD)' ஆகிய 2 மொடல்களை விற்பனை செய்கிறது.
5 இருக்கை அமைப்பைக் கொண்ட Y மொடல், ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இது ரூ.50.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

6 இருக்கை அமைப்பைக் கொண்ட Y L மொடல், ஒரு முறை சார்ஜ் செய்தால் 681 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இது ரூ.61.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

கார் விற்பனை மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் சர்வீஸ் வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதோடு, வாடிக்கையாளர்களின் வீடுகளில் சார்ஜிங் கட்டமைப்பை உருவாக்கி தருகிறது.
சென்னையிலே நிறுவனத்தின் நேரடி வாடிக்கையாளர் சேவை கிடைக்கும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும்.