வரலாறு பேசட்டும்... இதுவரை இந்திய அணி கண்டிராத: கோலி படைத்த மாபெரும் சாதனை
இங்கிலாந்துக்கு எதிரானா 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அணித் தலைவர் விராட் கோஹ்லி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
3வது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியடைந்த இந்திய அணி 4வது டெஸ்டிலும் மோசமான ஆட்டத்தையே தொடக்கத்தில் வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் 190 ஓட்டங்களுக்கு சுருண்டது. பிறகு பந்துவீச்சில் பெரும் சிரமப்பட்டு இங்கிலாந்து அணியை 291 ஓட்டங்களுக்கு வெளியேற்றியது.
இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 101 ஓட்டங்கள் பின் தங்கியது. ஆனால் 2வது இன்னிங்ஸில் அசத்தல் கம்பேக் கொடுத்த இந்திய அணி, 466 ஓட்டங்களை சேர்த்தது. ரோகித் சர்மா சதம் அடித்து மிரட்டினார். அதே போல புஜாரா, ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
இறுதியில், 368 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 100 ஓட்டங்கள் சேர்த்தது. ஆனால் அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து 210 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி இந்தியாவுக்கு 50 ஆண்டுகால காத்திருப்புக்கு கிடைத்த பரிசாகும்.
இங்கிலாந்தின் பெருமை மிக்க ஓவல் மைதானத்தில் 1971ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. 1971ம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணிதான் கடைசியாக ஓவல் மைதானத்தில் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்திருந்தது.
இந்த நிலையில் அணித் தலைவர் விராட் கோஹ்லியும் ஆகச்சிறந்த அணித் தலைவராக பெயர் பெற்றுள்ளார். SENA எனப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளில் அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.
அதாவது இங்கிலாந்தில் 3 வெற்றிகளும், அவுஸ்திரேலியாவில் 2 வெற்றிகளும், தென்னாப்பிரிக்காவில் ஒரு வெற்றியும் என மொத்தம் 6 வெற்றிகளை இந்தியாவுக்காக அவர் வென்றுக் கொடுத்துள்ளார்.
கோஹ்லியின் தலைமையில் இதற்கு முன்னர் வேறு சில சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளது. 1993ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுக்கொடுத்தார் விராட் கோஹ்லி.
மேற்கிந்திய தீவுகளில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை வென்று கொடுத்த முதல் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.