இரண்டாம் இன்னிங்ஸிலும் ஹீரோ... அணியை தூக்கி நிறுத்திய ஷர்துல் தாகூர்: அபூர்வ சாதனை
நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து, அபூர்வ சாதனையை சொந்தமாக்கியுள்ளார் ஷர்துல் தாகூர்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா, 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறியது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்கள் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், நேற்று மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 270 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ரவீந்திர ஜடேஜா க்றிஸ் வோக்ஸ் ஓவரில் 17 ஓட்டங்களில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரஹானே 8 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் க்றிஸ் வோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
தொடர்ந்து 44 ஓட்டங்களில் கோஹ்லி வெளியேற, அடுத்து ரிஷப் பண்ட் - ஷர்துல் தாகூர் பிரமாதமான பார்ட்னர்ஷி அமைத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சை மிக லாவகமாக இருவரும் எதிர்கொண்டனர்.
ஆண்டர்சன், ராபின்சன் என்று எந்த பந்துவீச்சாளர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி பவுண்டரிகளை பறக்க விட்டனர். ரிஷப் பண்ட் அடக்கி வாசிக்க, ஷர்துல் தூள் கிளப்பினார். 60 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார் ஷர்துல் தாகூர்.
லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து, இரண்டு முறையும் இக்கட்டான நிலையில் இருந்து இந்தியாவை கரை சேர்த்துள்ளார் ஷர்துல் தாகூர்.
இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 8வது விக்கெட்டுக்கு களமிறங்கி ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த 6வது வீரர் எனும் சாதனையை ஷர்துல் படைத்துள்ளார்.
இதற்கு முன், ஹர்பஜன் சிங் மற்றும் ரிதிமான் சாஹா ஆகியோர் 8வது வீரர்களாக களமிறங்கி, இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்துள்ளனர்.
உலகளவில் 6வது வீரர் என்ற பெருமையையும், இந்திய அளவில் 3வது வீரர் எனும் பெருமையையும் ஷர்துல் பெற்றிருக்கிறார். தொடர்ந்து, ஜோ ரூட் ஓவரில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஷர்துல் வெளியேறினார்.