உலக அதிசய பட்டியலில் தஞ்சாவூர் பெரிய கோவில் - மத்திய அரசு பரிந்துரை
thanjavur big temple to recommed for world wonders list: தஞ்சாவூர் பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்க உள்ளதாக சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய்குமார் ஜா தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் பெரிய கோவில்
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவில், சோழர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துகாட்டாக ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

தமிழ்நாடு மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்து கூட ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.
ஏற்கனவே இந்த கோவிலை UNESCO உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரித்துள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூர் பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் சேர்க்கவும் இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள உள்ளது.
மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய்குமார் ஜா தலைமையில் எம்.பி.க்கள் குழு நேற்று தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வருகை தந்தனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர்கள், அங்குள்ள பழமையான ஓவியங்கள், கல்வெட்டுகள், சிற்பங்களை பார்த்தோடு, கோயில் கட்டுமானம், கல்வெட்டு செய்திகள் குறித்து கேட்டறிந்தனர்.
உலக அதிசய பட்டியலுக்கு பரிந்துரை
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய்குமார் ஜா, "தஞ்சாவூர் பெரிய கோவில் இந்தியாவின் ஓர் அதிசயம். இதுவரை வட இந்தியாவில் அமைந்துள்ள தாஜ்மஹாலை மட்டுமே மிகப்பெரிய அதிசயமாக நாங்கள் அதிசயமாக நினைத்தோம்.
ஆனால், பெரியகோவில் அதை விட பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய பிரமாண்டமான கோவிலை உருவாக்கியிருப்பது வியப்பளிக்கிறது.
ஏற்கனவே யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவுச்சின்ன பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரிய கோவிலை, உலக அதிசய பட்டியலில் சேர்க்க நாடாளுமன்ற குழு நிச்சயமாக பரிந்துரைக்கும்." என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த எம்பிக்கள் குழு கல்லணைக்கு சென்று ஆய்வு செய்ததோடு, அதன் நீர்பாசன பரப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனர்.