பெருமைப்படுகிறோம்! பிரித்தானியா மக்களவையில் இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்ட நன்றி! மாட் ஹான்காக் புகழாரம்
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் தாமதம் இருந்தாலும் இந்தியாவுடனான கூட்டாண்மைக்கு பிரித்தானியா பொருமைப்படுவதாக நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா மக்களவையில் இன்று உரையாற்றிய மாட் ஹான்காக், தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதில் தாமதம் இருந்தாலும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடனான கூட்டாண்மைக்கு பிரித்தானியா பெருமைப்படுகிறது.
இந்திய சீரம் இன்ஸ்டிடியூட்டிலிருந்து திட்டமிடப்பட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்ய தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்போது, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிற்கு என் நன்றியை பதிவு செய்ய விரும்புகிறேன், அவர்கள் பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் தடுப்பூசி தயாரிக்கிறார்கள்.
பிரித்தானியாவின் மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனத்தால் (MHRA)அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் தொழில்நுட்பமும் அவற்றின் திறனும் குறிப்பிடத்தக்கவை.
இந்த ஆண்டு மட்டும் இந்திய சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை ஒரு பில்லியன் டோஸ் உற்பத்தி செய்கிறது, அந்நிறுவனத்துடனான நமது கூட்டாண்மை பெருமைப்படக்கூடிய ஒன்றாகும் என சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக் கூறினார்.