உக்ரைனிலிருந்து காதலன் அனுப்பிய அந்த புகைப்படம்: பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
தான் உக்ரைனில் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதற்கு ஆதாரமாக புகைப்படம் ஒன்றை அனுப்பிவைத்திருந்தார் பிரித்தானிய பெண் ஒருவரின் புதுக்காதலர்.
விவாகரத்தான சோகத்தில் இருந்த பிரித்தானிய பெண்
இங்கிலாந்தில் வாழும் ரேச்சல் (Rachel Elwell, 54), சமீபத்தில்தான் விவாகரத்தானதால் தனிமையில் வாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பேஸ்புக்கில் ஸ்டீபன் (Stephen Bario, 54) என்ற நபரின் அறிமுகம் கிடைத்தது.
இருவரும் சமூக ஊடகத்தில் மணிக்கணக்காக உரையாடிக்கொண்ட நிலையில், தான் ஒரு புராஜக்டுக்காக உக்ரைன் செல்வதாக கூறியுள்ளார் ஸ்டீபன்.
பின்னர் சில நாட்களுக்குப் பின் உக்ரைன் எண்ணிலிருந்து ரேச்சலை அழைக்கத் துவங்கியுள்ளார் ஸ்டீபன்.
Credit: Damien McFadden
இப்படியே பார்க்காமலே இருவரும் காதலை வளர்த்துக்கொண்டிருந்த நேரத்தில், ஒருநாள் ரேச்சலை பதற்றத்துடன் அழைத்த ஸ்டீபன், தன்னை உக்ரைனில் ஒரு கூட்டம் கடத்திவைத்திருப்பதாகவும் பணம் கொடுத்தால்தான் தன்னை விடுவிப்பதாகவும் கூறியுள்ளார். பின்னணியில் யாரோ சிலர் அவரை மிரட்டும் சத்தமும் கேட்க, அத்துடன், ஸ்டீபன் கட்டிப்போடப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்றும் வரவே பயந்துபோன ரேச்சல் பெருந்தொகை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இப்படியே ஸ்டீபன் பல்வேறு காரணங்கள் கூற, காதலில் மயங்கிப்போயிருந்த ரேச்சல், 99,000 பவுண்டுகள் வரை ஸ்டீபனுக்கு அனுப்பிவிட்டார்.
பின்னர் தான் பிரித்தானியா வருவதாகவும், இருவரும் சந்திக்கலாம், சேர்ந்து வாழலாம் எனவும் ஸ்டீபன் கூற, ரேச்சல் ஆசையுடன் அவரை சந்திப்பதற்காக அவர் கொடுத்த முகவரிக்குச் சென்றுள்ளார்.
காத்திருந்த தொடர் அதிர்ச்சிகள்
ஆனால், ரேச்சல் சென்ற முகவரியில் ஒரு பெண்தான் இருந்திருக்கிறார். அங்கு ஸ்டீபன் என்ற பெயரில் யாரும் இல்லை என அவர் கூற, முதன்முறையாக சந்தேகம் ஏற்பட, பொலிசாரிடம் புகாரளித்துள்ளார் ரேச்சல்.
அப்போதுதான் அவருக்கு ஒரு உண்மையை பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அதாவது, ஸ்டீபன் என்ற பெயரில் ஒருவர் இல்லவே இல்லை. அந்த நபர் ரேச்சலுக்கு அனுப்பிய புகைப்படம், ஸ்பெயின் நாட்டு புகைப்படக்கலைஞர் ஒருவருடையது.
அத்துடன், ஸ்டீபன் என்ற பெயரில் ஒருவர் பல லண்டன் பெண்களை மோசடி செய்ததும் தெரியவரவே ஆடிப்போய்விட்டார் ரேச்சல். தன்னிடம் பணம் இல்லாததால் கிரெடிட் கார்டு மூலமும்,கடன் வாங்கியும்தான் ரேச்சல் அந்த நபருக்கு பணம் அனுப்பியுள்ளார். இப்போது காதலும் போய், பணமும் போய் திகைத்துப்போய் உட்கார்ந்திருக்கிறார் அவர்.
விடயம் என்னெவென்றால், இதுபோல, 250,000 பெண்கள், காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு தங்கள் பணத்தை இழந்துள்ளார்களாம்.