கொரோனா பொதுமுடக்கத்தின்போது பிரித்தானியாவில் இந்தியக் குடும்பம் செய்த சாதனை
கொரோனா பொதுமுடக்கத்தின்போது பிரித்தானியாவில் பலர் தங்கள் வீடுகளுக்கு வர்ணம் அடித்தல், பழுதுபார்த்தல் மற்றும் வீட்டிலிருந்தவண்ணம் வேலை செய்வதற்கான அலுவலகத்தை தயார் செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, இந்தியக் குடும்பம் ஒன்று தங்கள் வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் ஒரு சிறு விமானத்தையே தயாரித்துள்ளது.
இந்தியாவிலிருந்து மேற்படிப்புக்காக பிரித்தானியா வந்தவர்கள் அஷோக் (Ashok Aliseril - 38) மற்றும் அபி (Abi - 35). இணையம் வாயிலாக சந்தித்து 2011ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு எசெக்சிலுள்ள Billericay என்ற இடத்தில் குடியமர்ந்துள்ளனர் தம்பதியர். தம்பதியருக்கு தாரா (8), தியா என்னும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
ஃபோர்ட் நிறுவனத்தில் பொறியாளராக பணி புரியும் அஷோக்குக்கு சிறிய ரக விமானங்கள் மீது ஒரு ஆசை. ஆகவே, விமானம் ஓட்ட பயிற்சி எடுக்கத் துவங்கியுள்ளார் அவர். 2019ஆம் ஆண்டு பயிற்சியை முடித்து, தனது குடும்பத்தை தான் இயக்கும் விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவு செய்தபோது, இரண்டு இருக்கைகள் கொண்ட விமானங்கள் மட்டுமே வாடகைக்குக் கிடைத்துள்ளன.
முதலில் சற்று ஏமாற்றமடைந்தாலும், பிறகு, தாங்களே ஏன் ஒரு விமானத்தைத் தயாரிக்கக்கூடாது என்ற எண்ணம் உருவாகியுள்ளது அஷோக்குக்கு.
தனது திட்டத்தை மனைவியிடம் சொல்ல, முதலில் அவர் தயங்கினாலும், பின்னர் இருவருமாக பட்ஜெட் போடத்துவங்கியிருக்கிறார்கள்.
2020ஆம் ஆண்டு, தங்கள் வீட்டின் பின்னால் இருந்த பெரிய தோட்டத்தில், நண்பர்கள் உதவியுடன் விமானம் ஒன்றை உருவாக்கத் துவங்கியுள்ளார் அஷோக். ஆனால், ஒரு வார்த்திற்குள் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நண்பர்கள் கூடி வேலை செய்ய முடியாமல் போக, அஷோக் குடும்பத்தினர், மகள் தாரா உட்பட, தாங்களே விமானத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள்.
வெளிநாடுகளிலிருந்து விமான பாகங்கள் ஒவ்வொன்றாக மெதுவாக வந்து சேர, காலை 7.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை அலுவலக வேலையை முடித்தபின், மனைவி, மகள் உதவியுடன் விமானத்தை முழுமையாக்கும் நடவடிக்கைகளில் இறக்கியுள்ளார் அஷோக்.
கடுமையான பல மாத உழைப்புக்குப் பின் 2021ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் புதிதாக வர்ணம் பூசப்பட்டு முழுமையடைந்துள்ளது அந்த விமானம். அபியும் விமானம் ஓட்டக் கற்றுக்கொண்டுவிட்ட நிலையில், விரைவில் குடும்பமாக பல இடங்களுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளது அஷோக் குடும்பம்.
பொதுமுடக்கக் காலகட்டம், எங்களுக்கு பயனுள்ளதாக முடிந்தது என்கிறார் விமானம் ஒன்றின் சொந்தக்காரராகிவிட்ட அபி புன்னகையுடன்.