துப்பாக்கியைக் காட்டிய விவகாரம்... பிரித்தானிய மகாராணியாரை வம்புக்கு இழுக்கும் பிரான்ஸ் அரசியல்வாதி
ஊடகவியலாளர்களை நோக்கி துப்பாக்கியைக் காட்டியதால் சர்ச்சைக்குள்ளான பிரான்ஸ் அரசியல்வாதி, தேவையில்லாமல் பிரித்தானிய மகாராணியாரை வம்புக்கு இழுத்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் மீது கடுமையான வெறுப்பு கொண்டவரான Eric Zemmour (63), அடுத்து நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருவார் என்ற ஒரு கணிப்பு உள்ளது. இந்நிலையில், நேற்று பாரீஸில் நடைபெற்ற ஆயுதக் கண்காட்சி ஒன்றிற்கு சென்றிருந்த Zemmour, துப்பாக்கி ஒன்றை எடுத்து ஆய்வு செய்துகொண்டிருந்தார்.
அப்போது தன்னிடம் கேள்விகள் கேட்ட ஊடகவியலாளர்களை நோக்கி துப்பாக்கியைத் திருப்பிய அவர், என்ன ஜோக்கடிக்கிறீர்களா? பின்னால் செல்லுங்கள் என்றார்.
இந்த விடயம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், ஒரு ஆயுதத்தை ஒருவர் ஆய்வு செய்யும்போது, இரண்டு விதிகளைப் பின்பற்றவேண்டும். ஒன்று, துப்பாக்கி ஒன்றைக் கையில் எடுத்தால், அதில் குண்டுகள் இருப்பதாகவே கருதவேண்டும். இரண்டு, தான் அழிக்க விரும்பாத ஒரு பொருளை நோக்கி துப்பாக்கியை குறிவைக்கக்கூடாது. ஆனால், Zemmour இந்த விதிகள் எதையும் குறித்துக் கவலைப்படவில்லை.
ஆனால், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பதிலாக, தேவையில்லாமல் பிரித்தானிய மகாராணியாரை வம்புக்கு இழுத்து சர்ச்சையை மீண்டும் பெரிதாக்கியுள்ளார் Zemmour.
ட்விட்டரில், மகாராணியார் துப்பாக்கி ஒன்றை ஆய்வு செய்யும் ஒரு படத்தை ட்வீட் செய்து, அதில் ஒரு இதயம் படத்தையும் போட்டு வைத்துள்ளார் Zemmour.
அந்த புகைப்படம், 28 ஆண்டுகளுக்கு முன் சர்ரேயிலுள்ள தேசிய துப்பாக்கி சுடும் மையத்திற்கு மகாராணியார் சென்றிருந்தபோது எடுக்கப்பட்டதாகும்.
அத்துடன், Zemmourஐப் போல மகாராணியார் யாரையும் நோக்கி துப்பாக்கியைக் குறிவைக்கவில்லை என்பதுடன், அவர் பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.