கொரோனா தடுப்பூசி திட்டம் தாமதமானதால் சுவிட்சர்லாந்துக்கு எவ்வளவு இழப்பு தெரியுமா?
கொரோனா தடுப்பூசி திட்டம் தாமதமானதால், சுவிட்சர்லாந்துக்கு நாளொன்றிற்கு 100 மில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
முடிந்தவரை விரைவாக தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றுவது, மக்கள் நலன் ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் அவசியம் என்று கூறியுள்ளார் பொருளாதார துறை பேராசிரியரான Marius Brülhart என்பவர்.
அவர் சொன்னது உண்மைதான் என நிரூபித்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று. உலக நாடுகள் பல தங்கள் மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க சதவிகிதத்தினருக்கு கொரோனா தடுப்பூசி அளித்துவிட்ட நிலையில், சுவிட்சர்லாந்து வெறும் 4 சதவிகிதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கியுள்ளது.
சுவிஸ் கொரோனா தடுப்பூசி திட்டம் தாமதமாவதற்கு காரணம், தடுப்பு மருந்து வந்து சேருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதுதான்.
இப்போதைய வேகத்தில் தடுப்பூசி போட்டால், சுவிட்சர்லாந்தில் அனைவருக்கும் போட இன்னமும் 17 முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என கருதப்படுகிறது.
இப்படி தடுப்பூசி போடுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், சுவிட்சர்லாந்துக்கு நாளொன்றிற்கு 50 முதல் 100 மில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் தேசிய கொரோனா தடுப்பு அறிவியல் அமைப்பு மேற்கொண்டுள்ள ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.