தினகரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? மனைவி-மகள் பெயரில் இருக்கும் சொத்து விபரங்களும் வெளியானது
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவரான தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு அதில் எவ்வளவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சியின் வேட்பாளர்களும், தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
அதில் தங்கள் சொத்துவிவரங்களையும் பதிவிட்டுள்ளனர். அந்த வகையில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக கட்சியின் தலைவர் தினகரன் தன்னுடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அசையும் சொத்து, 19 லட்சத்து, 18 ஆயிரத்து, 485 ரூபாய். அசையா சொத்தாக, 57 லட்சத்து, 44 ஆயிரம் ரூபாய் உள்ளது.
தினகரனின் மனைவி அனுராதாவிடம் அசையும் சொத்தாக, 7 கோடியே, 66 லட்சத்து 76 ஆயிரத்து 730, அசையா சொத்தாக, 2 கோடியே, 43 லட்சத்து, 76 ஆயிரத்து 317 உள்ளது.
மகள் ஜெயஹரிணி பெயரில், மொத்தம், 12.26 கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளன.
மேலும், தினகரன் தன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட, 28 கோடி அபராதம் உள்பட, 51 கோடியே 32 லட்சத்து 17 ஆயிரத்து 403 ரூபாய், அரசுக்கு நிலுவையில் உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
