நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தாயிடமிருந்து குழந்தையை பிரித்த தந்தை செய்த கொடுஞ்செயல்: தண்டனை அறிவிப்பு
கனடாவின் கியூபெக்கில், 2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், ஏழு வயது சிறுமி ஒருத்தி உடல் முழுவதும் டேப் ஒட்டப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டாள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி மறுநாள் இறந்துபோனாள்.
அவளைக் கண்டெடுக்கும்போது, உடலில் ஒட்டுத்துணியின்றி, சிறுநீரின் மத்தியில், மெலிந்த நிலையில் காணப்பட்ட அவளது தோல் சாம்பல் நிறத்தில் இருந்ததாக மருத்துவ உதவிக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்திருந்தார்.
அவள் கண்டெடுக்கப்பட்ட இடம், அவளது படுக்கையறை என்று கூறப்பட்ட நிலையில், நிச்சயமாக அது ஒரு படுக்கையறை போல காட்சியளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கில், சிறுமியின் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாக, அவளது தந்தையின் இரண்டாவது மனைவி, அதாவது மாற்றாந்தாய் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஏற்கனவே கைது செய்யப்பட்டு டிசம்பர் 17 அன்று சிறையிலடைக்கப்பட்டுவிட்டார். அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரால் 13 ஆண்டுகளுக்கு ஜாமீனிலும் வரமுடியாது.
இதற்கிடையில், குழந்தையின் வாயில் டேப் ஒட்டிய அவளது தந்தைக்கு நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டது.
அவருக்கு, மகளின் மரணத்துக்கு காரணமான அமைந்த விடயங்களுக்கு உதவியாக இருந்ததற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தனைக்கும், அந்த நபர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து குழந்தையை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளார்.
குழந்தையைப் பெற்ற தாய் நேற்று நீதிமன்றத்தில் குழந்தையின் தந்தையை நேருக்கு நேராகப் பார்த்து, ஏன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து குழந்தையைப் பொறுப்பில் எடுத்துக்கொண்டாய், அவளை காயப்படுத்துவதற்காகவா, அவளை அலட்சியப்படுத்துவதற்காகவா அவளை நேசித்தவர்களிடமிருந்து அவளைப் பிரித்து எடுத்துச் சென்றாய் என்று சத்தமிட்டு அழுது கதறிய சம்பவம் கல் மனதையும் கரைக்கக்கூடியதாக அமைந்தது.