ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் நடைபெறும் திகதி அறிவிப்பு
14 வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டம் பிப்ரவரி 17-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், அடுத்த நாளில் இந்த ஏலம் நடைபெறவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் புதன்கிழமை தெரிவித்தது.
முன்னதாக ஐபிஎல் அணிகள் தங்கள் வசம் இருக்கும் வீரர்களை தக்க வைப்பதற்கும், விடுவிப்பதற்குமான அவகாசம் ஜனவரி 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதுதொடர்பான வர்த்தக நடைமுறைகள் பிப்ரவரி 4-ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையின்படி, நடப்பு சீசனுக்காக 8 அணிகள் 139 வீரர்களை தக்கவைத்துக் கொண்ட நிலையில், 57 வீரர்களை விடுவித்துள்ளன. அணிகள் பல முக்கிய வீரர்களை விடுவித்துள்ளதால் ஏலம் விறுவிறுப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.
வீரர்களை விடுத்த நிலையில், எதிர்வரும் ஏலத்தில் அதிகபட்சமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.53.2 கோடி கையிருப்புடன் பங்கேற்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரூ.35.7 கோடியுடனும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.34.8 கோடியுடனும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.22.9 கோடியுடனும், மும்பை இந்தியன்ஸ் ரூ.15.3 கோடியுடனும், டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.12.8 கோடியுடனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.10.8 கோடியுடனும் வருகின்றன.
குறைந்தபட்சமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.10.7 கோடியுடன் ஏலத்துக்கு வருகிறது.
கொரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட நிலையில், நடப்பாண்டு சீசனை இந்தியாவிலேயே நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் முயற்சித்து வருகிறது. இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் தொடரின் அடிப்படையில் அதற்கான முடிவு மேற்கொள்ளப்படவுள்ளது.