பிரித்தானியா வெடிகுண்டு தாக்குதல்... தற்கொலை குண்டுதாரியை டாக்சிக்குள் அடைத்து பெரும் சேதத்தை தவிர்த்த சாரதி
பிரித்தானிய மருத்துவமனை ஒன்றிற்கு வெளியே டாக்சி ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த டாக்சியில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் இருந்ததை அறிந்த டாக்சி சாரதி, சமயோகிதமாக விரைந்து செயல்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் Remembrance Day என்னும் நிகழ்வு நேற்று அநுசரிக்கப்பட்டது. அந்நாளில் சரியாக பகல் 11 மணிக்கு பிரித்தானியாவே அமைதி காக்கும். ஆனால், 10.59க்கு திடீரென லிவர்பூலிலுள்ள மகளிர் மருத்துவமனை ஒன்றின் அருகே டாக்சி ஒன்று வெடித்துச் சிதறியது.
டாக்சி வெடித்துச் சிதறியதில் டாக்சியிலிருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார், டாக்சியின் சாரதிக்கு உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அந்த டாக்சி வெடிப்பு சம்பவம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த டாக்சியை செலுத்தியவர் David Perry என்பவர். டாக்சியில் ஏறிய ஒருவர், லிவர்பூல் ஆங்கிலிக்கன் தேவாலயத்துக்குச் செல்லுமாறு கூறியிருக்கிறார்.
டாக்சி சென்று கொண்டிருக்கும்போதே, நேற்று Remembrance Day என்பதால், ஆங்காங்கு சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்திருக்கின்றன. அதைக் கண்டதும் அந்த நபர் டாக்சியை லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு விடுமாறு கூறியிருக்கிறார்.
மருத்துவமனையின் அருகே டாக்சியை நிறுத்திய David, தனது டாக்சியில் பயணித்த நபரின் உடையில் சிறிய மின் விளக்கு எரிவதை கவனித்திருக்கிறார். உடனே, அது ஒரு வெடிகுண்டாக இருக்கலாம் என கணித்த David, அந்த நபர் ஒரு தற்கொலை குண்டுதாரியாக இருக்கலாம் என கணித்து, சட்டென கார் கதவைத் திறந்து வெளியே குதித்து, அந்த நபரை காருக்குள் வைத்துப் பூட்டியிருக்கிறார்.
அப்போதுதான் கார் வெடித்துச் சிதற, காருக்குள் இருந்தவர் உயிரிழக்க, David காயமடைந்திருக்கிறார்.
David அந்த நபரை காருக்குள் வைத்துப் பூட்டாமலிருந்திருந்தால், அந்த நபரால் பல உயிர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதால், அவரது சமயோகித எண்ணத்திற்கு பாராட்டுகள் குவிகின்றன.
லிவர்பூல் ஹீரோ என Davidஐ பலரும் பாராட்டியுள்ளார்கள். அவர் தன் உயிரையும் பெரிதாக கருதாமல் அந்த நபரை காருக்குள் வைத்துப் பூட்டி பலரது உயிரைக் காப்பாற்றியுள்ளார் என்கிறார்கள் அவரது சக சாரதிகள்.