ஒரே நாளில் கோடீஸ்வரராக கிடைத்த வாய்ப்பை நேர்மையாக உதறித் தள்ளிய பிரித்தானியர்
பிரித்தானியர் ஒருவருக்கு 2 ட்ரில்லியன் பவுண்டுகளுக்கான காசோலை ஒன்று மின்சார நிறுவனத்தால் அனுப்பப்பட்டது.
அதாவது, பிரித்தானியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அடித்த புயல் காரணமாக, மின்சாரம் தடைபட்டு, மக்கள் இருளில் தவித்ததற்காக அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
அவ்வகையில், யார்க்ஷையரைச் சேர்ந்த Gareth Hughes என்பவருக்கு ஒரு காசோலை அனுப்பப்பட்டிருந்தது.
அந்த காசோலையில், 2,324,252,080,110 பவுண்டுகள் Garethக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது 2 ட்ரில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான தொகை!
அந்த காசோலையை அவர் வங்கியில் டெபாஸிட் செய்திருப்பாரானால், உலகிலேயே பணக்கார நபராக அவர் ஆகியிருப்பார்.
ஆனால், அதில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்பதை புரிந்துகொண்ட Gareth, தனது காசோலையை ட்விட்டரில் பதிவிட்டு, அந்த மின்சார நிறுவனத்திடம், நாங்கள் பல நாட்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்தது உண்மைதான். நீங்கள் வழங்கிய இழப்பீட்டுக்கு நன்றி.
ஆனால், நான் எனக்கு அளிக்கப்பட்ட காசோலையை வங்கியில் டெபாஸிட் செய்வதற்கு முன், உங்களால் இவ்வளவு பெரிய தொகையை வழங்க முடியுமா என்பதை உறுதி செய்துகொள்ள முடியுமா?
நீங்கள் அனுப்பிய தொகையை கொஞ்சம் சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், எங்கள் பகுதியிலேயே இப்படி பெரிய தொகையுடன் நான்கு பேருக்கு காசோலைகள் வந்துள்ளன என்று தெரிவித்திருந்தார்.
அதை கவனித்த மின்சார நிறுவனமும் தன் தவறைப் புரிந்துகொண்டு உடனடியாக தான் அனுப்பிய காசோலைகளை மக்கள் காசாக்காமல் தடுக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அதேபோன்ற 74 தவறான காசோலைகளை மின்சார நிறுவனம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நேர்மையாக தனக்கு வந்த காசோலை குறித்து தெரிவித்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட நிறுவனம், பின்னர் அவர்களுக்கான சரியான தொகையை அனுப்பிவைத்துள்ளது.
Garethஇன் நேர்மைக்காக அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன!