இளவரசர் ஹரியின் மகனை கொல்லவேண்டும் என்று கூறியுள்ள பிரித்தானியர்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வழக்கு
இளவரசர் ஹரியின் மகன் ஒரு கலப்பினக் குழந்தை என்பதால், அதைக் கொல்லவேண்டும் என்று கூறிய நபர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் என்று கருதும் ஒரு கூட்டம் பல நாடுகளில் இருக்கிறது. அவர்கள் ஆசியர்களையும் கருப்பினத்தவர்களையும் குறைவாக கருதி மோசமாக விமர்சிப்பதுண்டு.
அப்படி ஒரு நபர், பிரித்தானிய இளவரசர் ஹரியின் குடும்பத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இளவரசர் ஹரியின் மூத்த மகனான ஆர்ச்சி, வெள்ளையரான ஹரிக்கும் கலப்பினப் பெண்ணான மேகனுக்கும் பிறந்தவர் என்பதால், அந்தக் குழந்தை ஒரு தீட்டு என்று கூறியுள்ள Christopher Gibbons (38) என்னும் தெற்கு லண்டனைச் சேர்ந்த அந்த நபர், ஹரியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேகனை திருமணம் செய்ததால் ஹரியை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்றும், தேசத்துரோகம் செய்ததாக அவருக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார் Gibbons.
Gibbons மற்றும் கிழக்கு லண்டனைச் சேர்ந்த Patten-Walsh என்னும் இருவரும், வானொலி நிகழ்ச்சி ஒன்றை நடத்தும்போது இந்த பயங்கர கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
இருவர் மீது வழக்குத் தொடரப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.