பிரெஞ்சு தீவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியர்கள்... நாடுகடத்தப்பட்டதால் அதிர்ச்சி
பிரெஞ்சு தீவு ஒன்றிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய குடும்பம் ஒன்று காவலில் வைக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டதால் கடும் அதிர்ச்சியை சந்தித்துள்ளது.
பிரித்தானியர்களான Steve Goode (31), அவரது மனைவி Charlotte (29) மற்றும் அவர்களது ஆறு மாதக் குழந்தையான Penelope ஆகியோர், டிசம்பர் மாதம் 20ஆம் திகதி பிரெஞ்சு கடல் கடந்த பிரதேசமான Tahiti தீவில் சென்று இறங்கினர்.
லண்டனிலிருந்து அமெரிக்கா சென்று அங்கிருந்து சுற்றுலா கனவுகளுடன் 15,000 பவுண்டுகள் செலவு செய்து Tahiti தீவில் சென்று இறங்கிய பிறகுதான் தெரிந்தது, அவர்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு மோசமான அனுபவத்தை சந்திக்க இருக்கிறார்கள் என்பது!
ஆம், பாஸ்போர்ட் சோதனைகளுக்குப் பிறகு, Steve குடும்பத்தினரும், மற்றும் சில பிரித்தானியர்களும் சிறிய அறை ஒன்றில் அடைக்கப்பட்டுளார்கள். சிறு குழந்தை இருந்தும் தங்களுக்கு உணவு தரவோ, கழிவறையைப் பயன்படுத்தவோகூட அதிகாரிகள் மறுத்துவிட்டதாக தெரிவிக்கிறார் Steve.
விடயம் என்னவென்றால், Omicron வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, டிசம்பர் 16இலிருந்து பிரித்தானிய பயணிகள் பிரான்சுக்கு பயணிக்க பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.
ஆனால், கடல் கடந்த பிரதேசமான Tahiti தீவிலும் இதே விதிகள் அமுலில் இருக்கும் என்பதை Steve எதிர்பார்க்கவில்லை. சொல்லப்போனால், அது குறித்து Tahiti தீவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் தெளிவான அறிவிப்பு இல்லை என்கிறார் Steve.
ஆக, 6 மணி நேரம் உணவோ தண்ணீரோ இல்லாமல் ஒரு அறையில் அடைத்துவைக்கப்பட்ட பின், Steve குடும்பத்தினரை உடனடியாக நாடு கடத்துமாறு பிரான்ஸ் உயர் ஆணையரிடமிருந்து உத்தரவு வந்ததாம்.
மூன்று நாட்கள் ஹொட்டல் அறை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டபின், அவர்கள் அமெரிக்காவிலிருந்து விமானம் ஏறியதால், அமெரிக்காவுக்கே அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள் Steve குடும்பத்தினர்.
24ஆம் திகதி அமெரிக்கா சென்றடைந்த Steve குடும்பத்தினர், தாங்கள் பாதுகாப்பாக அமெரிக்கா சென்றடைந்துள்ளதாகவும், அடுத்து பிரித்தானியா திரும்புவதா அல்லது வேறெங்காவது சுற்றுலா செல்வதா என்பது குறித்து யோசித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், Steve குடும்பத்தினருக்கு பிரான்ஸ், விசா கொடுத்திருக்கிறது, கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரம் அவர்களிடம் உள்ளது, அமெரிக்காவிலிருந்து Tahiti தீவுக்கு புறப்படும்போது, விமான நிறுவனம் அவர்களை விமானத்தில் ஏற அனுமதித்துள்ளது.
இவ்வளவுக்கும் பிறகு, Tahiti தீவில் வந்து இறங்கும் நேரத்தில் பிரித்தானியர்களுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி, அறையில் அடைத்து மோசமாக நடத்தியிருக்கிறார்கள்.
மொத்தத்தில், பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான பிரச்சினையில் தாங்கள் பலிகடா ஆக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கிறார் Steve.