சிக்னலில் நின்றபோது சாலையோரம் விழுந்து கிடந்தவரைக் கண்ட கனேடியர்: பின்னர் தெரியவந்த அதிரவைக்கும் தகவல்கள்
கனேடிய நகரமொன்றில், சிக்னலில் தனது காரை நிறுத்திய ஒருவர், தற்செயலாக சாலையோரம் ஒருவர் விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Kelownaவில் Harvey Avenue மற்றும் Gordon Drive என்னும் பகுதிகள் சந்திக்கும் இடத்தில் இந்த சம்பவம் நடக்க, Ashton Light என்னும் அந்த கனேடியர் உடனே காரை விட்டிறங்கி விழுந்து கிடந்தவருக்கு உதவ ஓடியிருக்கிறார். விழுந்து கிடந்த நபரின் கண்கள் மேலே சொருகியிருக்க, வெளிறிப்போய்க் கிடந்திருக்கிறார் அவர்.
அவருடனிருந்த ஒரு பெண், விழுந்து கிடப்பவர் தன் நண்பர் என்றும் அவர் கத்தியால் குத்தப்பட்டதாகவும் தெரிவிக்க, Ashton அவரை சோதிக்கும்போது அவரது நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்ட காயம் ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார்.
Yellow tape is strung around the intersection of Harvey and Gordon in #Kelowna. Black tarps block much of the road, and there’s a heavy police presence. pic.twitter.com/MM701wi9La
— Jules Knox (@Jules_Knox) April 26, 2022
உடனடியாக Ashton அவசர உதவியை அழைக்க, அவர் மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்போதே, மற்றொரு நபர் Ashtonஐ நோக்கி விரைந்து வந்திருக்கிறார். அவரும் Ashtonஇடம் தன்னையும் ஒருவர் கத்தியால் குத்திவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த இரட்டைக் கத்திக் குத்து சம்பவங்களால் அப்பகுதி பரபரப்படைந்துள்ள நிலையில், பொலிசார் அங்கு தடுப்புக்களை உருவாக்கி போக்குவரத்தைத் திருப்பி விட்டிருக்கிறார்கள்.
குத்தப்பட்டவர்கள் யார், என்ன நடந்தது என்ற விவரங்கள் எதையும் பொலிசார் இதுவரை வெளியிடவில்லை.