பிரான்சில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கும் சில முக்கிய மாற்றங்கள்
2022ஆம் ஆண்டு, மே மாதத்தில், பிரான்சில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்...
புதிய அரசு
முதலாவதாக, ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மே மாதத்தில் புதிய அரசு பதவியேற்க உள்ளது.
இமானுவல் மேக்ரான் மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீண்டும் ஜனாதிபதியானால், தான் ராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரான்ஸ் பிரதமர் Jean Castex.
ஆக, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதுடன், மேக்ரான் அமைச்சரவையில் பல மாற்றங்களையும் மேற்கொள்ள இருக்கிறார்.
பள்ளி விடுமுறைகள் முடிவுக்கு வருகின்றன
வட பிரான்ஸ் மற்றும் Provence-Alpes-Côte d’Azur பகுதிகளில் ஈஸ்டர் விடுமுறைகளுக்குப் பின் பள்ளிகள் திறந்துவிட்ட நிலையில், மத்திய பிரான்சிலுள்ள பள்ளிகள் மே 2ஆம் திகதி, திங்கட்கிழமையன்றுதான் திறக்க இருக்கின்றன. பாரீஸ், தெற்கு மற்றும் மேற்கு பிரான்சிலோ, மே 9 அன்றுதான் பள்ளிகள் திறக்க இருக்கின்றன.
வாக்காளர்கள் பதிவு செய்ய கடைசி நாள்
நீங்கள் பிரான்ஸ் நாட்டுக் குடிமகனானாக இருந்து, இன்னமும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்யவில்லையென்றால், மேலும் தாமதிக்கவேண்டாம். காரணம், வாக்களிப்பதற்கு ஒன்லைனில் பதிவு செய்ய, மே மாதம் 4ஆம் திகதி, புதன்கிழமையும், நேரடியாக சென்று பதிவு செய்வதற்கு, மே 6ஆம் திகதியும்தான் கடைசி நாட்கள் ஆகும்.
வேட்பாளர்கள் வேட்பு மனு செய்யும் கடைசி நாள்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மே 16க்கும், மே 20க்கும் இடையில் தங்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாகவேண்டும்.
வருமான வரி தாக்கல் செய்யும் நேரம்
பிரான்சில் வாழும் அனைவருக்கும், மே மாதம் வருமான வரி தாக்கல் செய்தல் துவங்கும் நேரம் என்பதை மறந்துவிடவேண்டாம்.
குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு
பணவீக்கம் காரணமாக, குறைந்தபட்ச ஊதியம், மே மாதம் 1ஆம் திகதி தானாகவே அதிகரிக்க உள்ளது. குறைந்தபட்ச ஊதியம் 2.65 சதவிகிதம் அதிகரிக்க உள்ளதால், ஒரு மணி நேரத்துக்கான குறைந்தபட்ச ஊதியம் மே 1 முதல், 10.57 யூரோக்களிலிருந்து, 10.85 யூரோக்களாக அதிகரிக்க உள்ளது.
மாணவர்களுக்கான நிதி உதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்
2022-2023ஆம் கல்வி ஆண்டுக்கான, மாணவர்களுக்கான நிதி உதவிக்கு விண்ணப்பிக்க, மே 15ஆம் திகதி கடைசி நாள். இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், விண்ணப்பிப்பதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் இல்லை என்றாலும் கூட, மே 15ஆம் திகதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளதை கவனத்தில் கொள்வது நல்லது.
வட்டி விகிதம் அதிகரிப்பு?
Livret A என்று அழைக்கப்படும் அரசால் ஒழுங்குபடுத்தப்படும் சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதம், பண வீக்கம் காரணமாக மே மாதம் 1ஆம் திகதி முதல் அதிகரிக்கலாம் என ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.