Claw Clip பிறந்த சுவாரசியமான கதை உங்களுக்கு தெரியுமா?
இன்று உலகம் முழுவதும் பெண்கள் (ஏன் சில ஆண்களுக் கூடத்தான்) தலையில் அணியும் ஒருவகை கிளிப்பின் பின்னால் ஒரு நெகிழவைக்கும் கதை உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
அதன் பின்னணியில் மனதை நெகிழவைக்கும் ஒரு புலம்பெயர்தல் கதை உள்ளது.
1990களில் பிரபலமாக விளங்கிய ஒரு பொருள், கோவிட் காலகட்டத்தில் மக்கள் அழகு நிலையங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது அத்தியாவசியமான ஒரு பொருளாகிப்போனது.
அது, claw clip என்னும் க்ளிப். அதன் பின்னணியிலோ ஒரு நெகிழவைக்கும் ஒரு கதை உள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒர் கர்ப்பிணிப்பெண், தன் நாட்டில் பட்ட கஷ்டங்களுக்குத் தப்பி உறவினர்கள் உதவியுடன் எப்படியோ பிரான்சை வந்தடைந்துள்ளார்.
ANNE-MARIE DIAS BORGES
அவரது பெயர் மரியா. அப்போது அவருக்கு 24 வயது. 1976ஆம் ஆண்டு, பிரான்சிலுள்ள Riom என்னும் சிறிய நகரத்தில் அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
தெருவோரம் பிள்ளையுடன் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த மரியாவைக் கண்ட ஒரு பிரெஞ்சுத் தம்பதியர், மரியாவுக்கு குடியிருக்க ஒரு இடம் பார்த்துக்கொடுப்பதாகவும், குழந்தை மேரியை (Anne-Marie Dias Borges) தாங்கள் ஒரு இரவு பார்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
மூக்கும் முழியுமாக இருந்த குழந்தை மேரியை கிறிஸ்டியன் (Christian Potut) மற்றும் சில்வியேன் (Sylviane) என்னும் அந்த தம்பதியர் தங்கள் வீட்டுக்குக் கொண்டு வர, அப்புறம் அந்தக் குழந்தையைப் பிரிய அவர்களுக்கு மனமே இல்லாமல் போக, அவளைத் தத்தெடுத்துக்கொண்டார்களாம்.
முக்கியமான விடயம் என்னவென்றால், தம்பதியரும் கஷ்டப்படுபவர்கள்தான். அதிகம் படிக்காத கிறிஸ்டியன், சீப்பு, கிளிப் போன்ற விடயங்களைத் தயாரித்து விற்பனை செய்பவர்.
ஒரு நாள் தனது கை விரல்களைக் கோர்த்தும் பிரித்தும் கொண்டிருந்த கிறிஸ்டியனுக்கு ஒரு யோசனை தோன்றியிருக்கிறது.
NBC/PHOTO 12/ALAMY
நாம் சீப்பு தயாரிக்கிறோம், கிளிப்பும் தயாரிக்கிறோம், இரண்டையும் ஒரே பொருளாக இணைத்து ஏன் தயாரிக்கக்கூடாது என அவர் யோசிக்க, அப்படி உருவானதுதான் claw clip என்னும் க்ளிப்.
கொஞ்சம் கொஞ்சமாக பிரான்சில் வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்ட அந்த கிளிப், பின்னர் பல நாடுகளுக்கு பரவத்துவங்கியுள்ளது.
ஸ்பெயின் ராஜ குடும்பத்தினர் கூட அதை விரும்பிக் கேட்டிருக்கிறார்கள். இன்று உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள அந்த claw clip என்னும் க்ளிப் உருவானது இப்படித்தான்.
ஒரே ஒரு வருத்தம், கிறிஸ்டியன் அந்த கிளிப்பிற்கு பிரான்ஸ் தவிர்த்து காப்புரிமை வாங்கத் தவறிவிட்டார்.
கிறிஸ்டியனின் வளர்ப்பு மகளான Anne-Marie Dias Borges, இன்று பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கும் பொறுப்பில் இருக்கிறார்.
GETTY IMAGES
கருப்பினப் பெண்ணான தன்னைத் தத்தெடுத்ததற்காக எப்போதாவது வருத்தப்பட்டிருக்கிறீர்களா என தனது வளர்ப்புப் பெற்றோரிடம் ஒருமுறை கேட்டாராம் மேரி.
அதற்கு பதிலளித்த கிறிஸ்டியன், ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவு கொடுத்ததற்காக மக்கள் தன்னை பைத்தியக்காரன் என கூறியதாகவும், நீயே கஷ்டப்படுகிறாய், உனக்கு எதற்கு இதெல்லாம் என தன்னைக் கேட்டதாகவும் பதிலளித்தாராம்.
உன்னை என் கைகளில் முதன்முறை வாங்கியபோது உன்னைக் கண்டதும் என் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுத்தது, அது கண்டதும் காதல் என்றாராம் அவர்.
கூடவே, உன்னை நான் பார்த்தபோதே, நீ என்னுடையவள் என்பதை உணர்ந்தேன் என்றாராம், மேரியின் வளர்ப்புத் தாயாகிய சில்வியேன்!