பீட்ஸா சிப்ஸ் போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடும் பிரித்தானியர்களுக்கு ஒரு மோசமான செய்தி
பிரெக்சிட் எப்போதோ முடிந்தாயிற்று... அவ்வப்போது அரசியல்வாதிகள் அது குறித்து விவாதங்களில் ஏற்படுகிறார்கள். பிறகு அவர்கள் அமைதியாக வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்போய் விடுகிறார்கள்.
ஆனால், எந்த நாட்டிலானாலும் சரி, அரசுகள் எடுக்கும் முடிவால் பாதிக்கப்படுவது என்னவோ மக்கள்தான், அரசியல்வாதிகள் அல்ல. அதுவும், நடுத்தர வர்க்கத்து மக்கள்... அதேதான் பிரித்தானியாவிலும் வரும் மாதங்களில் நடக்கப்போகிறது என்கிறார் உணவக உரிமையாளர் ஒருவர்.
மக்கள் விரும்பி உண்ணும் சில உணவுப்பொருட்கள், குறிப்பாக வீட்டுக்கு வாங்கிச் சென்று உண்ணும் பீட்ஸா, சிப்ஸ், சிக்கன் முதலியவற்றின் விலை வரும் மாதங்களில் கடுமையாக உயர இருப்பதாக எச்சரிக்கிறார் Tiger Bite takeaway என்னும் உணவகத்தின் பொது மேலாளரான Phil Adams.
அதாவது, பிரெக்சிட் பிரச்சினை காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. வாரம்தோறும் அவை உயர்ந்துகொண்டே போகின்றன.
மாவு, சிப்ஸ், சிக்கன் மற்றும் சீஸ் என்னும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளதால், உணவுப்பொருட்களின் விற்பனை பாதிக்கப்படுகிறது.
அதாவது, வீடுகளுக்கு வாங்கிச் செல்லும் உணவுப்பொருட்களான பீட்ஸா, சிப்ஸ் முதலானவை ஒரு பார்சலாக சேர்த்து விற்கப்படும். அவற்றில் சிப்ஸ் மட்டும் இல்லையென்று வைத்துக்கொள்வோம், மக்கள் சிப்ஸுக்காக இன்னொரு கடைக்கு போகமாட்டார்கள். மொத்தமாக இந்த கடையில் வேண்டாம், வேறு கடையில் ஆர்டர் வாங்கிக்கொள்வோம் என்று கிளம்பிப் போய்விடுவார்கள்.
அந்த உணவகத்தின் மொத்த விற்பனையும், ஒரு சிப்ஸால் பாதிக்கப்படும். இன்னொரு விடயம் என்னவென்றால், இந்த உணவுப்பொருட்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து வரும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. சீஸுக்கான பொருட்கள் டென்மார்க்கிலிருந்தும், பீட்ஸா மாவு கனடாவிலிருந்தும், சிக்கன் போலந்தும், ஹாலந்து, ரொமேனியா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளிலிருந்தும், சிப்ஸ் ஹாலந்து, பெல்ஜியம் மற்றும் ஜேர்மனியிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
அவற்றை இறக்குமதி செய்வதற்கான செலவு, அதுவும் பிரெக்சிட்டுக்குப்பின் துறைமுகங்களில் தாமதம், கண்டெய்னர்களின் போக்குவரத்துச் செலவு என்று பார்த்தால், உணவக உரிமையாளர்கள் செலவிடும் தொகை எங்கோ போய்விடுகிறது.
ஆக, இவற்றையெல்லம் சேர்த்தால், ஒன்றில் அந்த செலவை தங்கள் தலையில் தாங்கிக்கொண்டு உணவக உரிமையாளர்கள் விற்பனை செய்யவேண்டும், அல்லது விலையை உயர்த்தவேண்டும்.
இதுதான் பிரச்சினை! ஆக, இப்படியெல்லாம் நடக்கும், பிரெக்சிட் நம் சாப்பாட்டிலேயே கைவைத்துவிடும் என்று தெரிந்திருந்தால் ஒருவேளை பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று வாக்களித்திருக்கவே மாட்டார்களோ என்னவோ? சரி, விடயத்துக்கு வருவோம்.
ஆக, பொருட்கள் தட்டுப்பாடு, தேவையோ அதிகம், உணவுப்பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு என அனைத்து பிரச்சினைகளும் ஒன்றிணைந்து, கடைசியாக மக்கள் தலையில் கைவைக்கப்போகின்றன.
ஆகவே, வரும் மாதங்களில் மக்கள் விரும்பி வாங்கிச் சென்று உண்ணும் உணவுகளின் விலைகள் கடுமையாக உயரப்போகிறது என Phil Adams முதலான உணவக உரிமையாளர்கள் எச்சரிக்கிறார்கள்.