பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தைக் காணச் சென்ற மருத்துவர்: தெரிவித்த அதிரவைக்கும் தகவல்...
மரணமடைந்ததாக தவறாக கருதப்பட்ட ஒரு நபர் உயிருடனேயே பிணவறையில் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
தவறுகளை மறைக்க மருத்துவமனை முயன்றதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றைக் காணச் சென்ற மருத்துவர் ஒருவர், உயிரிழந்த அந்த நபர் உயிருடன் இருக்கும்போதே பிணவறையில் வைக்கப்பட்டிருக்கலாம் என்னும் அதிரவைக்கும் செய்தியைக் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த Kevin Reid (55) என்னும் நபர், சென்ற மாதம் 5ஆம் திகதி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்ததைத் தொடர்ந்து அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டது.
Credit: 7News
அவர் இறந்ததை உறுதி செய்ய மருத்துவர்கள் யாரும் இல்லாததால், செவிலியர்கள்தான் அவர் செப்டம்பர் 5 அன்று இறந்ததாக பதிவு செய்துள்ளார்கள்.
ஆனாலும், இறப்புச் சான்றிதழுக்காக, Kevin இறந்ததை ஒரு மருத்துவர் உறுதி செய்தாகவேண்டும் என்பதால், மறுநாள் மருத்துவர் ஒருவர் அழைக்கப்பட, அந்த மருத்துவர் சென்று சடலங்களை வைக்கும் பைக்குள் வைக்கப்பட்டிருந்த Kevinஉடைய உடலை பரிசோதித்துள்ளார்.
அப்போது, பைக்குள் வைக்கப்பட்டிருந்த Kevinஉடைய கண்கள் திறந்திருந்ததையும், அவரது கையில் இரத்தம் கொட்டியிருப்பதையும், அவர் இடது கையை தனது வலது கையின் மீது வைத்திருப்பதையும் அந்த மருத்துவர் கண்டுள்ளார்.
அதாவது, பைக்குள் வைக்கப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்ட Kevin உயிருடன் இருந்திருக்கலாம் என்றும், உயிருடனேயே அவரை பிணவறையில் வைத்திருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Credit: 7News
செவிலியர்கள் Kevin 5ஆம் திகதி உயிரிழந்ததாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அதை மறைத்து அவர் 6ஆம் திகதி உயிரிழந்ததாக சான்றிதழ் கொடுக்குமாறு அந்த மருத்துவரை மருத்துவமனை ஊழியர்கள் வற்புறுத்த, அவர் மறுத்ததுடன், அந்த மருத்துவமனையை விட்டே வெளியேறிவிட்டார்.
இதற்கிடையில், Kevinஉடைய இறுதிச்சடங்குக்காக அவரது உடலை அவரது உறவினர்கள் இறுதிச்சடங்கு மையத்துக்குக் கொண்டு செல்ல, அவர் எப்போது இறந்தார் என இறுதிச்சடங்கு மைய ஊழியர்கள் கேட்க, அவர் 5ஆம் திகதி இறந்ததாக அவர்கள் கூற, மருத்துவமனை கொடுத்த இறப்புச் சான்றிதழில் Kevin 6ஆம் திகதி இறந்ததாக குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்ட ஊழியர்களால் அந்த பிரச்சினை வெளியே தெரிந்திருக்கிறது.
அதாவது, அந்த இறப்புச் சான்றிதழில் திகதியை மாற்றிவிட்டார்கள் அந்த மருத்துவமனை ஊழியர்கள்.
தற்போது இந்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், Kevin மரணம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.