உணவுப்பொருள் ஒன்றினால் நோய் பரவுவதாக கிடைத்த தகவல்... கனடாவில் உறையவைக்கப்பட்ட உணவுப்பொருள் ஒன்றை திரும்பப்பெறும் நிறுவனம்
கனடாவில் உறையவைக்கப்பட்ட மக்காச்சோளத்தில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மக்காச்சோள பாக்கெட்களை உணவு நிறுவனம் ஒன்று திருப்பிக் கொடுக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மொன்றியலை மையமாகக்கொண்டு செயல்பட்டு வரும் New Alasko Limited Partnership என்ற உறைந்த உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம், தனது அலாஸ்கா பிராண்ட் உறையவைக்கப்பட்ட மக்காச்சோளத்தில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மக்காச்சோள பாக்கெட்களை திரும்பப் பெற்று வருகிறது.
இந்த மக்காச்சோள பாக்கெட்கள், Saskatchewan, பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா, மனித்தோபா மற்றும் கியூபெக் மாகாணங்களில் விற்ப்னை செய்யப்பட்டு வருகின்றன. மற்ற மாகாணங்களிலும் அவை கிடைக்கலாம் என கருதப்படுகிறது.
உணவுப்பொருள் ஒன்றினால் நோய் ஒன்று பரவுவதாக கிடைத்த தகவலின்பேரில் கனேடிய உணவு ஆய்வு ஏஜன்சி மேற்கொண்ட ஆய்வைத் தொடர்ந்து, இந்த மக்காச்சோள பாக்கெட்கள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.
குறிப்பிட்ட மக்காச்சோள பாக்கெட்களை வாங்கியவர்கள் அவற்றை உண்ணவேண்டாம் என்றும், அதை தூர எறிந்துவிடவோ அல்லது வாங்கிய இடத்தில் திருப்பிக் கொடுத்துவிடவோ செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
சால்மோனெல்லா நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட உணவைப் பார்த்தால் அது பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், அதை உட்கொண்டால், ஆபத்தான, சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்த்தொற்றை அது உருவாக்கலாம்.
குறிப்பாக, சிறு பிள்ளைகள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோயெதிர்ப்புச் சக்தி குறைபாடு கொண்டவர்கள் இந்த நோய்க்கிருமியால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.