24 ஆண்டுகளாக சுத்தமான குடிதண்ணீருக்காக காத்திருந்த கனேடிய நகர மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி
கனடாவுக்குச் சொந்தமான ஒரு தீவில் வாழும் மக்கள் 24 ஆண்டுகளாக சுத்தமான குடிதண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், Shoal Lake 40 First Nation என்றொரு சிறு தீவு கனடாவில் உள்ளது. அங்கு செல்ல சரியான போக்குவரத்து வசதி கிடையாது. கோடைக்காலத்தில் படகுப் பயணம், குளிர்காலத்தில் தண்ணீர் உறைந்துவிடுவதால் அந்த உறைந்த தண்ணீர் மீது ஆபத்தான வகையில் பயணம். இப்படி அடிப்படை வசதியே இல்லாத ஒரு இடத்தில், வீட்டில் குழாயைத் திறந்தால் சுத்தமான குடிதண்ணீர் வரும் என எதிர்பார்க்கமுடியுமா?
ஆக, Alfred Redsky என்பவர் சுத்தமான குடிதண்ணீருக்காக போராடி வந்திருக்கிறார். இன்று, அந்த தீவுக்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு சுத்தமான குடிதண்ணீர் கிடைத்துவிட்டது. ஆனால், அதைக் குடிக்க Alfred இல்லை, அவர் 2013ல் இறந்துவிட்டார் என்கிறார் அவரது மகளான Angelina McLeod.
சுத்தமான குடிதண்ணீர் இல்லாமல் பலர் நோய்வாய்ப்பட்ட நிலையில், அடிப்படை வசதி கூட இல்லாத அந்த தீவில் வாழ்ந்த மக்களுக்கு, மற்றவர்களை விட நாம் கீழானவர்கள் போலும் என்று எண்ணம் கூட வந்திருக்கிறது.
ட்ரூடோவின் ஆட்சிக்காலத்தில் அந்த தீவில் முதன்முறையாக ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று அந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்படத் துவங்கியதையடுத்து, முதன்முறையாக மக்கள் குழாய்களில் வரும் சுத்தமான தண்ணீரை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.
பெடரல் பூர்வக்குடியின சேவைகள் துறை அமைச்சரான Marc Millerம், தீவின் தலைவரான Chief Vernon Redskyயும் முதன்முறையாக குழாயில் வந்த குடிதண்ணீரை சுவைத்து, அது நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
ஆக, கடைசியாக 24 ஆண்டுகளாக குடிதண்ணீருக்காக காத்திருந்த Shoal Lake 40 First Nation தீவின் காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது.