சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவிக்க உதவிய கொரோனா காலகட்டம்: கனடாவில் வாழும் இலங்கையர் ஒருவரின் அனுபவம்
இந்த கொரோனா வந்தாலும் வந்தது, நம்மில் பலரின் வாழ்க்கை முறையே மாறிப்போனது. மேலை நாடுகளில் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளில் அடைந்திருந்த பலர் தற்கொலை செய்துகொண்டது குறித்த செய்திகள், நம்மில் பலருக்கு கவலையை மட்டுமல்ல ஆச்சரியத்தையும் ஏற்படுத்தின.
எப்போது விடுப்பு கிடைக்கும் ஜாலியாக வீடுகளில் இருக்கலாம் என்று எதிர்பார்த்திருப்பார்கள் நம் குழந்தைகள், ஆனால், பள்ளிக்கு செல்ல முடியவில்லை என மன நலம் பாதிக்கப்பட்டார்கள் மேலை நாட்டுக் குழந்தைகள். ஒரு நாளாவது குடும்பத்துடன் செலவிட முடியாதா என ஏங்கிக் கிடந்தார்கள் நம் நாடுகளிலுள்ள பல பெற்றோர்.
வீட்டிலிருந்தபடி வேலை செய்வதை சுமையாக கருதினார்கள் மேலை நாட்டவர்கள் பலர். அதிலும், வெறுத்துப்போய் தற்கொலை செய்துகொண்டவர்களையும் பார்க்க முடிந்தது.
ஆக, ஆசிய நாட்டவர்களின் மன நிலைமையிலும், மேலை நாட்டவர்களின் மன நிலையிலும் பல வித்தியாசங்கள்... மே மாதம், ஆசிய பாரம்பரிய மாதமாக கனடாவிலும் அமெரிக்காவிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இலங்கையரான Don Perera என்னும் ஓய்வு பெற்ற இலங்கையர், கொரோனா காலகட்டம், அதனால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் போன்ற விடயங்களை தான் எப்படி எடுத்துக்கொண்டார் என்பது குறித்து விவரிக்கிறார்.
1981ஆம் ஆண்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்து வந்த Don Perera, கடந்த 40 ஆண்டுகளாக, முதலில் ஒரு பொறியாளராகவும் அதற்குப்பின் சொந்தமாக ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பணியும் செய்து வந்துள்ளார்.
அவருக்கு இரண்டு பிள்ளைகளும் நான்கு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். 2020ஆம் ஆண்டை, அனைவரும் மறக்க விரும்பும் ஒரு ஆண்டாகத்தான் அனைவரும் பார்த்தோம் என்று கூறும் Perera, இந்த கொரோனாவால் உலகமே கடந்த 14 மாதங்களாக நின்று போனது போன்ற உணர்வு பலருக்கு ஏற்பட்டதை மறுக்கமுடியாது. தனிமைப்படுத்தல் எளிதான ஒன்றாக இருக்கவில்லை என்கிறார்.
இந்த காலகட்டம், எதிர்பாராத பல விடயங்களை வாழ்வில் கொண்டுவந்தது என்கிறார் அவர். அதே நேரத்தில், வாழ்க்கையில் எதெல்லாம் முக்கியம் என்பதை மீளாய்வு செய்து, வாழ்வின் எளிய மற்றும் சாதாரண விடயங்களை அனுபவிப்பதில் நேரம் செலவிட நமக்கு அதிக நேரம் கிடைத்தது என்பதையும் மறுக்கமுடியாது என்கிறார் Perera. Pereraவின் மூத்த மகன் அவுஸ்திரேலியாவிலும், இளைய மகன் ரொரன்றோவிலும் வாழ்கிறார்கள்.
பிள்ளைகளுடன் இருப்பதை மிஸ் பண்ணுவதாக தெரிவிக்கும் Perera, தங்களைப் பொருத்தவரை, தொழில்நுட்பத்தின் உதவியால் தற்போது தினமும் இணையம் வாயிலாக தங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் சந்திக்கும் ஒரு வாய்ப்பை இந்த காலகட்டம் உருவாக்கிக்கொடுத்துள்ளதாக தான் நம்புவதாகவும் அது ஒரு பாக்கியம் என்றும் கூறுகிறார்.
இந்த கொள்ளைநோய் நாம் அனைவரும் சமம் என தனக்கு உணர்த்தியதாக தெரிவிக்கும் Perera, உங்கள் தோலின் நிறம் என்னவாக இருந்தாலும் சரி, நீங்கள் எங்கே பிறந்தவராக இருந்தாலும் சரி, கொரோனா அதை கவனித்து பாரபட்சம் பார்த்து தொற்றவில்லை என்கிறார்.