தீவிரவாத எண்ணம் கொண்டவன் எங்களுடனேயே வாழ்ந்திருக்கிறான்... புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டோமே: வருந்தும் பிரித்தானியக் குடும்பம்
ஒரு புகலிடக்கோரிகையாளருக்கு புகலிடம் கொடுத்த பிரித்தானியக் குடும்பம் ஒன்று, தீவிரவாத எண்ணம் கொண்டவன் எங்களுடனேயே வாழ்ந்திருக்கிறான், நாங்கள் அதைப் புரிந்துகொள்ள இயலாதவர்களாக இருந்துவிட்டோமே என வருந்திக்கொண்டிருக்கிறது.
லிவர்பூல் மகளிர் மருத்துவமனை அருகே தற்கொலைகுண்டுதாரி ஒருவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் முயற்சியின்போது உயிரிழந்தார்.
அந்த நபர் பயணித்த டாக்சியின் சாரதியான David Perry என்பவர், அந்த நபரின் சட்டைக்குள் சிறு மின்விளக்கு எரிவதைக் கவனித்திருக்கிறார். அது வெடிகுண்டாக இருக்கலாம் என கணித்த அவர், அந்த தற்கொலைகுண்டுதாரி தப்பிக்காத வகையில் காரைப் பூட்டிவிட்டு காரிலிருந்து வெளியேறமுயலும்போது குண்டு வெடித்துள்ளது.
David காயங்களுடன் உயிர்தப்பிவிட்ட நிலையில், அந்த தற்கொலைகுண்டுதாரி உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில், அந்த தற்கொலைகுண்டுதாரி, Enzo Almeni (32) என்ற பெயரில், லிவர்பூலிலுள்ள Malcolm மற்றும் Elizabeth Hitchcott என்ற தம்பதியர் வீட்டில் அவர்களுடன் வாழ்ந்துவந்துள்ளான்.
2015ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து புகலிடக்கோரிக்கையாளராக வந்த, சிரிய மற்றும் ஈராக்கிப் பின்னணி கொண்ட Enzoவின் உண்மையான பெயர் Emad Jamil Al Swealmeen.
கிறிஸ்தவ மதத்துக்கு மாற விரும்புவதாகக் கூறிய Emad, அதற்கான வகுப்புகளில் ஒழுங்காக பங்கேற்று, 2017இல், லிவர்பூல் தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளான். அதாவது, அவன் எந்த தேவாலயத்தைக் குறிவைத்து வந்தானோ, அதே தேவாலயத்தில் வைத்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளான்.
தற்போது, அந்த தேவாலயத்துக்குச் செல்லும்போதுதான், வழியில் ஆங்காங்கு சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததால் மனதை மாற்றிக்கொண்டு மகளிர் மருத்துவமனை ஒன்றை குண்டுவைத்து தகர்க்க முயன்றபோது குண்டு வெடித்து உயிரிழந்துள்ளான்.
இந்நிலையில், அவனை இவ்வளவு காலம் தங்களுடன் வாழவைத்த, Malcolm மற்றும் Elizabeth Hitchcott தம்பதியர், தங்களுடன் எட்டு மாதங்கள் வாழ்ந்து வந்த அன்பான மனிதன்தான் லிவர்பூல் குண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்தவன் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
அவன் இதைச் செய்தான் என நம்பவே முடியவில்லை என்று கூறியுள்ள Mr Hitchcott, அவர் தீவிரவாத எண்ணங்களால் ஆட்கொள்ளப்பட்டிருப்பான் என்பதற்கான எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை என்றும், தீவிரவாத எண்ணம் கொண்டவன் எங்களுடனேயே வாழ்ந்திருக்கிறான், நாங்கள் அதைப் புரிந்துகொள்ள இயலாதவர்களாக இருந்துவிட்டோமே என்றும் கூறி வருந்தியுள்ளார்.