பிரித்தானியா எதிர்கொள்ள இருக்கும் ஐந்து மிகப்பெரிய அச்சுறுத்தல்கள்: மஸ்கின் AI சொன்ன விடயம்
எலோன் மஸ்க் வெளியிட்டுள்ள Grok மென்பொருளிடம் பிரித்தானியா எதிர்கொள்ள இருக்கும் ஐந்து மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளது.
மிகப்பெரிய அச்சுறுத்தல்
பிரித்தானியா எதிர்கொள்ள இருக்கும் ஐந்து மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் இஸ்லாமிய பயங்கரவாதம் மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவையே முதல் இரண்டு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், மஸ்கின் அந்த AI மென்பொருள், எலோன் மஸ்க் தொடர்பிலும் எச்சரித்துள்ளது. மஸ்க் ஆதரிக்கும் பிரித்தானிய அரசியல்வாதியான Nigel Farage என்பவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதையும் Grok மென்பொருள் எச்சரித்துள்ளது.
சமீப நாட்களில் எலோன் மஸ்க் வெளியிட்டுள்ள Grok மென்பொருள் மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. மட்டுமின்றி, எலோன் மஸ்க் தொடர்பிலும் அந்த மென்பொருள் கடும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது.
தற்போதைய சூழலில் பிரித்தானியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் பயங்கரவாதம் என குறிப்பிட்டுள்ள Grok, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களுமே முதன்மை காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதாவது பயங்கரவாதம் ஒரு முக்கிய தேசிய பாதுகாப்பு ஆபத்தாகவே உள்ளது என்றும், அதில் இஸ்லாமிய தீவிரவாதம் முதன்மையான உள்நாட்டு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் விளக்கமளித்துள்ளது. அத்துடன் தீவிர வலதுசாரி பயங்கரவாதத்தின் வளர்ச்சியும் கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் தீவிர வலதுசாரி கருத்துக்களை எலோன் மஸ்கும் பதிவிட்டு வருவதாக Grok சுட்டிக்காட்டியுள்ளது. சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அரசு ஆதரவு தலையீடு ஆகியவை பிரித்தானியாவிற்கு இரண்டாவது பெரிய அச்சுறுத்தல் என Grok குறிப்பிட்டுள்ளது.
தீவிர வலதுசாரி
உலகளாவிய மோதல்கள் பிரித்தானியாவுக்கு மூன்றாவது பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என சுட்டிக்காட்டியுள்ள Grok, குறிப்பாக உக்ரைனில் ரஷ்யாவின் போர், காஸா - இஸ்ரேல் மற்றும் லெபனானில் மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதட்டங்களை பட்டியலிட்டுள்ளது.
ரஷ்யா, ஈரான் மற்றும் சீனாவால் அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்டுள்ளது. நான்காவதாக, வெள்ளம், வறட்சி மற்றும் வெப்ப அலைகள் போன்ற காலநிலை தொடர்பான நிகழ்வுகளிலிருந்து உடனடி அபாயங்களை பிரித்தானியா எதிர்கொள்கிறது என்றும், அத்துடன் உணவுப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு நீண்டகால அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கிறது என குறிப்பிட்டுள்ளது.
ஐந்தாவதாக தீவிர வலதுசாரி ஜனரஞ்சகவாதம் பிரித்தானியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது என்றே Grok குறிப்பிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 25 சதவீத மக்கள் ஆதரவு தீவிர வலதுசாரி அரசியல்வாதியான Nigel Farage பெற்றுள்ளதை Grok சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் பிரித்தானியாவில் எலோன் மஸ்கின் ஆபத்தான நகர்வுகளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு காரணியாக Grok குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |